வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மௌன்ஜீன் தோட்டத்தில் 6ம் இலக்க தேயிலை மலையில் பாரிய மரங்களைத் தறித்து சுமார் 6000 தேயிலைச்செடிகளை வீணாக்கி இருப்பதாகவும் இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாரிய கேள்விக்குறிக்குள்ளாகியிருப்பதாகவும் இதற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு கோரி கடந்த சனிக்கிழமை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்ட யாக்கத்திற்கு சொந்தமான மௌன்ஜீன் தோட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர். குறித்த தோட்டத்தில் வருமானம் இன்மை காரணமாக சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏனைய ஆடைத்தொழிற்சாலை தனியார் தோட்டங்கள் கடைகள் என பல்வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் உரிய பராமரிப்பு இன்றி தேயிலைச்செடிகள் காட்சியளிப்பதும் மக்கள் தோட்டத்தொழிலில் இருந்து விலகிச் செல்வதற்கு இது ஒரு காரணம் என இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த தோட்டத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே தற்போது தோட்டத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானம் இன்மை காரணமாக தோட்ட நிர்வாகம் வாரத்துக்கு இரண்டு நாள் மாத்திரம் தொழிலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்குவதாகவும் இந்நிலையில் இத்தோட்டத்தில் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் தேயிலை மலையில் மரம் வெட்டுவதற்காக பல ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் 6000 தேயிலைச் செடிகள் வரை அழிக்கப்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரசியல் தலைவர்களுக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கும் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் ஆனால் சரியான தீர்வினை இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தேயிலை தோட்டத்தின் வருமானத்தை நம்பிவாழும் 90 குடும்பங்களுக்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் கருத்து தெரிவிக்கையில் குறித்த தோட்டத்தில் பாரிய மரங்களை தறித்து சுற்றுப்புற சூழலை அழிவடையச்செய்து தேயிலைச் செடிகளை அழித்துள்ளதாகவும் பாரிய இயந்திரப் பயன்பாட்டின் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு மரம் வெட்டுவதை உடன் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மரம் தறிப்பது குறித்து கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்ட விடயங்களுக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு பெருந்தோட்ட யாக்கதிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்
நாங்கள் காலம் காலமாக பாட்டம் முப்பாட்டன் முதல் இந்த தோட்டத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம. கடந்த காலங்களில் இந்த தோட்டத்தில் சுமார் 350 மேற்பட்டவர்கள் தேயிலை தோழிலில் ஈடுப்பட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தோட்டத்தை உரிய வகையில் பாராமறிக்காததன் காரணமாக இன்று 90 தொழிலாளர்கள் வரை குறைந்துள்ளன. தேயிலை தோட்டங்களும் காடுகளாக மாற்றப்பட்டுள்ளன.தொழிலாளர்கள் தேயிலை மழையில் வேலை செய்ய முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றன. தோட்ட நிர்வாகம் தேயிலையினை பாதுகாப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.உரம் மருந்து போன்றன பயன்படுத்தாதன் காரணமாகவே இந்நிலை உருவாகியுள்ளன.இதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர்.
எனினும் 90 பேர் வரை மாத்திரமே இந்த தோட்டத்தில் தொழில் புரிகின்றனர்.இவர்கள் அனைவரும் இந்த தொழிலை மாத்திரம் தான் நம்பியிருக்கின்றனர். ஆனால் நிர்வாகம் இவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் முற்பணம் ஆகியன பெற்றுக்கொடுப்பதில்லை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது எவ்வாறு தங்களது குழந்தைகளை படிக்க வைப்பது.மாறாக தோட்டம் மாணிக்கல் அகழ்விற்காகவும், மரங்கள் தறிப்பதற்காகவும் அழிக்கப்படுகின்றன ஆகவே மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டதற்காக ஒரு ஹெக்கடர் தேயிலை கன்றுகள் நடப்பட வேண்டும், வெட்டிய மரத்தில் பெறும் லாபத்தில் 10 சதவீதத்தினை தோட்டத்தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் தேயிலை மலைகளை உரிய வகையில் பராமறிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தே தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
எனவே இது குறித்து தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் சுற்றுப்புற சூழலை பாதுக்காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாணிக்கல் அகழ்வினாலும், மரங்கள் தறிப்பதனாலும் இவ்வாறு மக்கள் வாழ்வாதாரத்தினை அழித்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது சரியா? என இவர்கள் கேள்வி எழுப்புகின்றன.எனவே இதற்கு சரியான தீர்வினை பெற்றுத்தரும் வரையில் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
கே.சுந்தரலிங்கம்.