எரிபொருள் பொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசாங்கத்தினை வெளியேற கோரியும் மலையகத்தில் உள்ள பிரதான நகரங்களில் நேற்று முதல் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது ஆர்பாட்ட காரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டன.
இதனால் டிக்கோயா,நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா , போடைஸ், தலவாக்கலை, கொழும்பு கண்டி ஊடான பிரதான வீதிகளின் பொதுப்போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகின.
பொதுப்போக்குவரத்துச்சேவை தடைப்பட்டதன் காரணமாக அரச ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் வீடு செல்லமுடியாது பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததுடன் பல கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டன.
இதேவேளை எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டிக்கோயா பகுதியில் காலையும் மாலையும் வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டிக்கோயா ஊடான பொதுப்போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன. அதனைத்தொடர்ந்து கலைந்து சென்று வீதியில் வழிவிட்டதனால் பொதுப்போக்குவரத்து வழமைக்கு திரும்பியது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக டிக்கோயா பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதனால் மஸ்கெலியா நோர்வூட் பகுதியில் இருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன.
மலைவாஞ்ஞன்