இஹல கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (19) தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தடம்புரண்ட ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் மேலும் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதனால் இன்று காலை 07 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் மீள் தடமேற்றும் நடவடிக்கையில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால், மேலும் இரண்டு ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, மதியம் 12.40 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயாவுக்குச் செல்லும் ரயிலையும், பிற்பகல் 03.00 மணிக்கு கண்டியிலிருந்து கொழும்பு கோட்டைக்குச் செல்லும் கடுகதி ரயிலையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மதியம் ரயில் மார்க்கத்திற்கு அருகில் ஒரு சிறிய மண்சரிவு ஏற்பட்ட நிலையில், ரயில் தடம் புரண்டது.
பின்னர் ஏற்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மலையகத்துக்கான ரயில் சேவைகளை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.