மலையக மக்களின் பிரச்சினைகளை அரசியல் பேரம் மூலம் தீர்த்து வைப்பதே இதொகாவின் நோக்கம்; ரமேஷ்!

0
164

இன்று மலையக மக்கள் உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான வித்தியாசத்தை நன்கு அறிந்தே வைத்துள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இலக்கு மலையக மக்களின் சம்பளம், குடியிருப்பு, கல்வி உள்ளிட்ட எஞ்சிய பிரச்சினைகளை அரசியல் பேரம் பேசும் சக்தியின் மூலம் தீர்த்து வைப்பதே ஆகும் என மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்

நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தை கையாளும் போது தொழிற் சங்க பலத்தையும் அரசியல் அழுத்தத்தையும் பயன்படுத்தியே வெற்றிகண்டது. கடந்த சம்பள விவகாரத்தில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதகமான அரசியல் தலையீடு காணப்பட்டது. சிலரின் காட்டிக்கொடுப்புகள் காரணமாக நிலுவைச் சம்பளத்தைக் கூட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டது.

நாட்டின் தேயிலை தொழில்துறையின் உடைமை இரண்டு வவ்வேறு பிரிவினர்களான சிறு தோட்ட உரிமையாளர்களிடமும் மற்றும் பெருந்தோட்ட கம்பனிகளிடமும் இருந்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கும் ஊக்குவிப்புக்களையும், மானியங்களையும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வழங்குவதில்லை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் நிர்வாகத்தின் கீழ் தொழில் புரியும் தொழிலாளர்களே ஆகும். அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்ற மலையக தரப்பினர் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான எவ்வித திருத்தத்தையும் இதுவரை முன்வைக்க வில்லை. மேலும் உரமாணியம், தேயிலை எற்றுமதி வரி, தேயிலை மீள்நடுகை மாணியம் போன்ற ஆக்கபூர்வமான கோரிக்கைகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களை குறை கூறி அதில் அரசியல் நடத்தும் உள்நோக்கமே பிரதான வகிப்பாகமாக காணப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தம் என்ற ஒன்று இருக்கின்றபடியால்தான் தொழிலாளர்களின் உரிமைகளும் சலுகைகளும் இன்னும் மீறப்படாமல் இருக்கின்றது.உதாரணமாக ஒரு தொழிலாளியை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய முடியாது. ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். ஒரு தொழிலாளி 180 நாட்கள் வேலை செய்திருந்தால் அவர் நிரந்தர தொழிலாளியாக பதிவு செய்யப்பட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சிலரின் தேர்தல் கால வாக்குறுதிகள் மலையக மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு மட்டுந்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலர் நாடகமாடி கூட்டு ஒப்பந்தம் செய்வதற்கு காலகெடு விதிப்பதைவிட அரசாங்கத்துடன் பேசி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு வழிசெய்ய முயற்சிப்பது மேலானது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் தொட்டு ஆறுமுகன் தொண்டமான் காலம் வரை இந்த மக்களுக்காக அர்ப்பணிப்போடு சேவையாற்றிக்கொண்டு இருக்கின்ற ஒரு அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த மக்களுக்காக சேவை செய்து இந்த மக்களின் நலன்களில் தங்களுடைய நலன் என்று ஏற்று செயல்படகூடிய ஒரு அமைப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.அந்தவகையிலே எங்களோடு என்றும் இருக்கின்ற கௌரவ தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இந்த சமூகம் கீழே இறங்கிவிட கூடாது என்பதில் மிக கவனத்தோடு இருக்கின்றார்.

பல சக்திகள் தன்னுடைய சுயலாபத்திற்காக வந்தாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே இந்த மலையக சமூகத்தை ஏற்று நடத்தக் கூடிய சக்தி இருக்கின்றது என்பதனை முழு இலங்கையும் மலையகமும் அறிந்திருக்க ஒரு காலகட்டமாக மாறியிருக்கின்றது. இன்று நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த விலைவாசி அதிகரிப்பை ஏனைய துறையினரால் ஓரளவிற்கு சமாளிக்க முடிந்தாலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்கொள்ள முடியவில்லை. எனவே பல்வேறு துறைசார்ந்த வழிகளிலும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதில் தன் பங்கினை செலுத்தி வருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நியாயமான சம்பளத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கும் என்றார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here