இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேச மட்டத்திலும் இன்றும் அன்றும் என்றும் பேசப்படுகின்ற, போற்றப்படுகின்ற எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தான் என்பதை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது என பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும், சட்டதரணியுமான கா.மாரிமுத்து புது டில்லியில் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் தெற்கு ஆசியா தொழிற்சங்கத்தின் நிறைவேற்றுசபைக் கூட்டத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104வது ஜனன தினத்தை முன்னிட்டு அங்கு சிறப்புரையாற்றுகையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மக்களுக்காகவே தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து சேவையாற்றிய ஒரு மாமனிதரை இலங்கை மாத்திரமல்ல முழு உலகமும் இழந்திருப்பது கவலைக்குரியது தான். எனினும், இன்றும் அமரர் விட்டுச் சென்ற பணிகளை எம்மால் மறக்க முடியவில்லை. இ.தொ.கா 77 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும் இன்றைய நாளில் அவரது 104வது ஜனன தினத்தை மலையகத்தில் பட்டிதொட்டியெல்லாம் நினைவு கூறப்படுகின்றது என்று சொல்வதைப் பார்க்கிலும், புது டில்லியில் இந்த தெற்காசிய தொழிற்சங்க சம்மேளனத்தில் அமரரை நினைவு கூரும் வாய்ப்புக் கிட்டியமைக்கு நன்றி கூறுகின்றேன்.
ஒரு காலத்தில் தெற்காசிய சம்மேளனத்தின் இணை ஸ்தாபகராகவும், செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது. உலக தொழிலாளர் வர்க்கத்திற்கு மூலாதாரம் என்பதை எவரும் மறக்கலாகாது. ஆகவே 104 ஜனன தினத்தில் தெற்காசிய மக்களோடு இக்கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கிடைத்தமைக்கு மகிழச்சியடைவதாக சட்டத்தரணி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஆசிய பசுபிக் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து பெருந்திரளான பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்