மலையக வீடமைப்பு காணிகளுக்கு கட்டுமானத்தின்போது தங்கப் பங்குதாரர் அனுமதி அவசியமில்லை- திலகர் எம்பி தெரிவிப்பு

0
158

மலையக வீடமைப்பு காணிகளுக்கு கட்டுமானத்தின்போது தங்கப் பங்குதாரர் அனுமதி அவசியமில்லை. – தோட்ட முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தினார் திலகர் எம்பி

மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான தனிவீட்டுத்திட்டத்தை நாம் அதிக அர்ப்பணிப்போடு முன்னெடுத்து வருகின்றபோதும் அதற்கு பல மட்டங்களில் தடங்கல்களை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிக்கின்றன. குறிப்பாக வீடமைப்புக்காணிகளைப் பெற்றுக்கொள்வதில் கட்டுமானத்தின்போதே தங்கப்பங்குடமையாளரின் அனுமதி கடிதம் அவசியம் எனக் கோரப்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்றது. குறித்த வீடுகளுக்கு உறுதிப்பந்திரத்தினை வழங்கும் போது அது அவசியமேயன்றி கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு அதற்கான அவசியம் இல்லை என்பதை தோட்ட நிர்வாகங்கள் புரிந்துகொண்டு வீடமைப்புக் காணிகளை ஒதுக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் இணைப்பு உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டப்பணிகள் முடிவுறும் தறுவாயில் இரண்டாம் கட்ட வீடமைப்பு பணிகளை முன்னெடுத்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று (நேற்று) பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவன நுவரெலியா பணிமனையில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, இந்தி உயர்ஸ்தாணிகர் காரியாலய அதிகாரி மஞ்சுநாத், தோட்ட முகாமையாளர்கள், வீடமைப்பு முகவர் நிறுவனங்கள், பெருந்தோட்ட மனிதவள நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மேற்படி கருத்தினை வலியுறுத்தினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர் மனிதாபிமான அடிப்படையில் 2012 ஆண்டு இந்திய அரசாங்கம் 50000 வீடுகளை இலங்கைக்கு வழங்கியது. அதில் 4000 வீடுகளே மலையகத்துக்கு வழங்கப்பட்ட நிலையில் 46000 வீடுகள் வடக்கு கிழக்கு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையகத்தில் 4000 வீடுகளை ஆரம்பிக்கவே நான்கரையாண்டுகளானது. காரணம், வடக்கு கிழக்கில் போன்று மலையகத்தில் பெருந்தோட்டத்துறை மக்கள் காணி உரிமையாளர்களாக இல்லை. இந்திய வீடமைப்புத்மிட்டமே காணியுரிமைக் கொண்டிருப்போருக்குத்தான் என்பது நிபந்தனை என்ற நிலையில் நாம் அரசியல் கோரிக்கையின் அடிப்படையில் காணியுரிமையினை வென்றெடுத்ததனாலேயே 2016 ஆம் ஆண்டிலாவது அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தவிரவும், நுவரெலியா , பதுளை மாவட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டு இருந்த இந்திய வீடமைப்புத்திட்டத்தை பெருந்தோட்ட மாவட்டங்கள் எல்லாவற்றுக்கும் விஸ்தரித்முள்ளோம்.

வீடமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக இந்திய பிரதமரின் இலங்கை பயணத்தின்போது மேலதிகமாக 10000 வீடுகள் கிடைக்கப்பெற்று இப்போது மொத்தமாக 14000 வீடுகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது.இந்திய வீட்டுத்திட்டமாயினும் சரி இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டமாயினும் சரி அதற்குரிய காணிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அதிகாரிகளினதும், தோட்ட நிர்வாகத்தினதும் கடமையாகிறது.

தமிழ் முற்போக்கு கூட்டணியோ அல்லது அமைச்சர் திகாம்பரமோ எதேச்சதிகாரமாகவோ அடாவடித்தனங்கள் மூலமாகவோ காரணிகளைக் கோரவில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, அப்போதைய காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருடன் இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திர அனுமதியின் அடிப்படையிலேயே நாம் வீடமைப்புக்குத் தேவையான காணிகளை கோருகின்றோம். தவிரவும் தற்போதைய தொழிலாளியோ அல்லது முன்னாள் தொழிலாளர் குடும்பமோ அவர்கள் லயத்தில் வசித்தால் அவர்களுக்கு வீடமைப்பு காணியுரிமை உண்டு என்பதும் அந்த அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தில் உண்டு.

இந்நிலையிலேயே வீடமைப்புக்காணிகளைப் பெற்றுக்கொள்வதில் கட்டுமானத்தின்போதே தங்கப்பங்குடமையாளரின் அனுமதி கடிதம் அவசியம் எனக் கோரப்பட்டு இழுத்தடிப்பு செய்யப்பட்டுவருகின்றது. குறித்த வீடுகளுக்கு உறுதிப்பந்திரத்தினை வழங்கும் போது அது அவசியமேயன்றி கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு அதற்கான அவசியம் இல்லை என்பதை தோட்ட நிர்வாகங்கள் புரிந்துகொண்டு வீடமைப்புக் காணிகளை ஒதுக்க வேண்டும். இதுதொடர்பான நிலைப்பாட்டை தோட்ட உயர் நிர்வாகிகள் கூட்டத்தில் மாத்திரமன்றி பாராளுமன்றிலும் எனது அதிருப்தியைப் பதிவு செய்தேன். தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தோட்ட நிர்வாகத்தை நடாத்திச் செல்ல வேண்டுமெனில் தோட்ட நிர்வாகங்கள் உரியமுறையில் காணிகளைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here