அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மாகாணங்களுக்கு இடையில் புதிதாக 41 ரயில் சேவைகள் இன்று (14) முதல் இடம்பெறவுள்ளன.
இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி, றம்புக்கணை , மஹவ, சிலாபம் வரையில் ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திணைக்களம் மருதானையில் இருந்து பெலியத்த மற்றும் காலி வரையில் ரயில் சேவை இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இன்று தொடக்கம் பிரதான ரயில் பாதையில் 42 ரயில் சேவைகளும், வடக்கு ரயில் பாதையில் 2 ரயில் சேவைகளும், கரையோரப் பாதையில் 44 ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன.
புத்தளம் பாதையில் 14 ரயில் சேவைகளும், களனிவெளி ரெயில் பாதையில் 10 ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன. நாளாந்தம் 112 ரயில் சேவைகள் இடம்பெறும் என்றும் திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500 பேருந்துகள் இன்று முதல் இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் பேருந்துகளும் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான சேவையை ஆரம்பிக்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.