மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக பரிசீலனை!

0
27

அரசியலமைப்பின் 154ண (4)(அ) யாப்புக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்திலிருந்து மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்குவது குறித்து நிதி ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலனை செய்யப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஹர்ஷன ராஜகருணா, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ, நிமல் பலிஹேன, திலிண சமரகோன் மற்றும் சம்பிக்க ஹெட்டியாராச்சி ஆகியோரின் பங்குபற்றலில் 2026.02.05 ஆம் திகதி  பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூடிய போதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.

நிதி ஆணைக்குழுவின் தலைவர் சுமித் அபேசிங்க உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களினால் 2026 ஆம் ஆண்டிற்கான மாகாண மூலதன மற்றும் மீண்டெழும் செலவினத் தேவைகளை மதிப்பீடு செய்வது குறித்து குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டது. மாகாண கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பெருமளவிலான பாடசாலைகள் மாகாண சபைகளின் கீழ் உள்ளதால், அதற்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அத்துடன், மாகாண சபைகளின் மூலதனச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பற்றாக்குறை நிலவுவதாக நிதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியதுடன், பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் செலவினங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அந்தப் பற்றாக்குறையை முடிந்தவரை ஈடுசெய்ய முயற்சிப்பதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், பிரதேச சபைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதி குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்கத்தில் போதிய மதிப்பீட்டு அதிகாரிகள் இல்லை என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பீட்டு அதிகாரிகளைப் பதவிக்கு அமர்த்துவதற்கும், மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுத்தால், அதற்காக மேலதிக நிதி தேவைப்படலாம் என நிதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.

மேலும், மாகாண சபைகளின் வருமானம் ஈட்டுதல் மற்றும் அந்த வருமானத்தைச் செலவிடுதல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த அறிக்கை மீதான பரிசீலனையை நிறைவு செய்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, இந்தக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here