மாதா சிலை உடைப்பு, இந்துக்களினதும் கிறிஸ்தவர்களினதும் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கே மலையக இந்துகுருமார் ஒன்றியம் குற்றச்சாட்டு

0
206

கடந்த சில தினங்களுக்கு முன் லிந்துலை நாகசேனை பகுதியிலும் எல்ஜின் தோட்ட பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள மாதாவின் திருச்சொருப சிலை இனந்தெரியாத விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இது இந்து மக்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையே இருக்கின்ற நல்லுறவிணை  சீர்குலைப்பதற்காகவே என அகில இலங்கை இந்து மகா சபாவின் தலைவரும் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றிய பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார்.

சிலை உடைப்பு தொடர்பாக இன்று ( 28.11.2021) கொட்டகலையில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகத்தில் நீண்டகாலமாக கிறிஸ்தவ மக்களும் இந்து மக்களும் மிகவும் அந்நியோந்நியமாகவும் சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் இடையில் எப்போதும் சமய ரீதியான பேதங்கள் இருக்கவில்லை. அவர்கள் இவ்வாறான ஒரு நிலையில் நாகசேனை பகுதியில் அமைந்துள்ள மாதா சொரூபமும் எல்ஜின் பகுதியில் உள்ள மாதா சொரூபமும் உடைக்கப்பட்டுள்ளது. இதனை எவர் செய்தாலும் தாராதரமின்றி அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

அத்தோடு இந்த சிலை உடைப்பு தொடர்பாக எவருக்காவது தெரிந்திருந்தால் அது தொடர்பாக பொலிஸாருக்கு அல்லது மலையக இந்து குருமார் ஒன்றியத்துக்கோ அறிவிக்குமாறு நாங்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சிலை உடைப்பு காரணமாக கிறிஸ்தவ மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

 

கே.சுந்தரலிங்கம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here