மாஹோ முதல் அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையை நவீனமயமாக்குவதற்காக இந்தியா நிதி உதவியை வழங்கியுள்ளது. இந்த ரயில் பாதைக்கு நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவ, முதல் கட்டமாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 770 மில்லியன் இலங்கை ரூபாய்) நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதி, இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில்வே ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்திய பொதுத்துறை நிறுவனமான இர்கோன் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் கடன் உதவியின் கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த ஆண்டு இந்திய அரசு அதனை நன்கொடையாக மாற்றியதால், இலங்கைக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்களாக,
இந்தத் திட்டத்தின் மூலம் ரயில் பாதையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
ரயில் சேவை மேலும் அதிகரிக்கப்பட்டு, பயணிகளுக்குச் சிறந்த, விரைவான சேவை கிடைக்கும்.
நவீன கட்டுப்பாட்டு மையம் மூலம் ரயில் போக்குவரத்தை நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்.
இது ரயில் நிலையங்களில் சரியான நேரத்தில் ரயில்கள் வந்து செல்வதை உறுதி செய்யும்.
திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இது 2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் உதவியுடன் ஏற்கனவே வடக்கு ரயில் பாதை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சமிக்ஞை அமைப்பும் ரயில்களின் செயல்பாட்டை மேலும் திறம்படச் செய்யும்.
இலங்கையின் ரயில்வே துறைக்கு இந்தியா இதுவரை சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இதன் மூலம், 500 கிலோமீட்டர் தூர ரயில் பாதை புனரமைக்கப்பட்டும் நிர்மாணிக்கப்பட்டும் உள்ளன .
மேலும், 400 கிலோமீட்டர் தூரத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட ரயில் இயந்திரங்கள், டீசலில் இயங்கும் ரயில்கள் மற்றும் பிரதான இயந்திரங்கள் இலங்கை ரயில்வேயின் திறனை அதிகரித்துள்ளன.
இலங்கையில் தொடர்புகளையும் உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் கொண்டிருக்கும் வலுவான உறுதிப்பாட்டினை மீள வலியுறுத்தும் இத்திட்டங்கள் மக்களை இலக்காகக் கொண்ட இந்திய அபிவிருத்தி பங்குடைமையின் அணுகுமுறையினை பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.