மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் : ஒப்புக்கொள்ளும் அரசாங்கம்

0
145

உலகின் பணக்கார நாடுகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது ஏழை நாடுகளுக்கு நியூமோனியா ஏற்படும் என ஒரு கதை உண்டு. தற்போதைய மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது பல நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச்சூழல் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டமை வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (21) நடைபெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு பெரும்போகத்தில் சோளப் பயிர்ச்செய்கைக்குத் தேவையான விதைகளை இலவசமாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” விவசாய அமைச்சின் கீழுள்ள சிறிய அளவிலான விவசாய வர்த்தக பங்கேற்பு வேலைத்திட்டத்தின் ஊடாக அனுராதபுரம், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் பெரும்போகத்தில் 40,000 ஏக்கர் சோளத்தை பயிரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு தேவையான சோள விதைகள் மற்றும் யூரியா உரங்களை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்காக 350 மில்லியன் ரூபா செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உலக வல்லரசுகளுக்கு இடையேயான இந்த போர்ச் சூழல் நம் நாட்டையும் பாதித்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது ஏழை நாடுகளுக்கு நியூமோனியா ஏற்படும் என ஒரு கதை உண்டு.

அதேபோல் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் , இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தண்ணீர் கட்டணம் உயரும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நேரத்தில் தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, அவ்வாறான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்காது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே ஒரே வழி. அரசியல் ஆதாயங்களுக்காக தனித்தனியாக செயல்பட்டால், அது நம்மை மேலும் படுகுழியில் தள்ளத்தான் செய்யும்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது நல்லதல்ல. ஆனால், நம் நாட்டில் இன்னும் அனல் மின்சாரம் மூலம்தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாட்களில் பல பகுதிகளில் மழை பெய்தாலும், நீர்மின் நிலையங்களில் இன்னும் 100 வீதம் நீர் மின் உற்பத்தி தொடங்கவில்லை.

மின்சார சபை அதிகாரிகளும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். எல்லா நேரத்திலும் மக்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமானதல்ல. எனவே இந்த நிலையில் இருந்து விடுபட நாம் அனைவரும் உழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here