மட்டக்களப்பு – சின்ன ஊறணி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது சிறுவன் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
தாம் வசித்துவந்த வீட்டில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதால் குறித்த சிறுவன், தாய் மற்றும் சகோதரிகள் இருவருமாக அருகிலுள்ள உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் புனரமைக்கப்படும் வீட்டில் மின் இணைப்பு பணிகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அவ்வீட்டுக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவன் அசைவற்று விழுந்து கிடப்பதை அவதானித்த உறவினர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.