ஈரான் மீதான போர் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தயார் எனவும், ஆனால் மீண்டும் இத்தகைய தாக்குதல்கள் நடக்காது என்பதற்கான உறுதியான உத்தரவாதங்கள் அவசியம் எனவும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அந்தோனியோ கோஸ்டாவுடன் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்கா முன்வைத்த 15 அம்சத் திட்டத்திற்குப் பதிலடியாக, ஈரான் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதில் ஆக்கிரமிப்பை நிறுத்துவது பிரதான நிபந்தனையாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றங்கள் தொடர்பில் ஐரோப்பா மௌனம் காப்பது அதன் மனித உரிமை கோரிக்கைகளுக்கு முரணானது என அவர் சாடியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் போர் ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் ஈரான் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 249 பெண்கள் மற்றும் 216 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கும் குறைந்த 17 குழந்தைகளும் அடங்குவர்.
சுமார் 113,000 பொது இடங்கள் (வீடுகள், பாடசாலைகள், வணிக வளாகங்கள்) சேதமடைந்துள்ளன. தலைநகர் தெஹ்ரானில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஈரானிய செம்பிறை சங்கத்தின் 18 வசதிகள் மற்றும் 3 நிவாரண ஹெலிகொப்டர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களை ஐரோப்பா ஆதரிக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் அந்தோனியோ கோஸ்டா தெரிவித்துள்ளார். போரினால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கவலை வெளியிட்ட அவர், இராஜதந்திர ரீதியில் தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.




