முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி.

0
181

வேன்டர் டூசென், புமா ஆகியோரின் சிறப்பான சதத்தால் பார்ல் நகரில் நேற்று நடந்த இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 வி்க்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்்த்தது. 297 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் 96 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வேண்டர் டூ சென் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் கேப்டன் டெம்பா புமா 143 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார் டூசென், புமா இருவரும் சேர்ந்து 4-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரின் ஆட்டம்தான் தென் ஆப்பிரிக்க அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியது.

இருவரையும் பிரிக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் பலவிதமான முயற்சிகள் செய்தும் இருவரையும் 49வது ஓவர்கள் வரை பிரி்க்க முடியவில்லை. அருமையான பேட்டிங் பிட்ச்சை இருவரும் நன்கு பயன்படுத்திக்கொண்டு நல்ல ஸ்கோரை அமைத்துக்கொடுத்தனர்.

சர்வதேச அளவில் கடந்த சில ஆண்டுகளாக, ஒருநாள், டி20 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து துவண்டு போயிருந்த தென் ஆப்பிரிக்காவுக்கு பூஸ்ட், குளுக்கோஸ் வழங்கும்வகையில் இந்திய அணி அங்கு பயணப்பட்டு, தோல்வி அடைந்து வருகிறது. ஃபார்மில் இல்லாத தென் ஆப்பிரிக்க அணியினருக்கு பேட்டிங், பந்துவீச்சு அளிக்கும் வகையில்தான் இந்திய வீரர்கள் செயல்படுகிறார்கள். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் இங்கிடி, பெலுக்வாயே, ஷாம்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேசவ் மகராஜ் ஒரு விக்ெகட்டை வீழ்த்தினர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை இந்திய அணியா இது என்று தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் விழும்போது கேட்க வேண்டியதாக இருந்தது. கோலி கேப்டன்ஷிப்பில் இல்லாததால் கேப்டன் பொறுப்பில் இருக்கும் அக்ரஸிவ்,விக்கெட் எடுத்தால் துள்ளிக் குதித்து ஓடிச் சென்று பந்துவீ்்ச்சாளர்களை உற்சாகப்படுத்துவது போன்றவை மிஸ்ஸிங். கடந்த 7 ஆண்டுகளாக இவையெல்லாம் அடையாளங்களாக, பெஞ்ச்மார்க்காக இருந்த நிலையில், அமைதியாக, உற்சாகமின்றி இருந்ததைப் பார்த்தபோது இந்திய அணியா என வியப்பாகத் தெரிகிறது.

கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு முதல் முறையாகக் கேப்டன் பொறுப்பேற்று செயல்பட்டார். 6-வது பந்துவீச்சாளராக வெங்கடேஷ் இருந்தும் அந்த வாய்ப்புக்கே செல்லாமல் இருந்தது ஏனோ எனத் தெரியவில்லை. புமா-டூசென் பார்ட்னர்ஷிப்பை பிரி்க்க முடியாமல் சிரமப்பட்டபோது தாராளமாக 6-வது பந்துவீ்ச்சாளர் வாய்ப்புக்கு சென்றிருக்கலாம். ஆனால், ஏன் வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரியவில்லை. பார்ட்னர்ஷிப்பை பிரி்க்க முடியாத தருணங்களில் கோலியின் கேப்டன் அணுகுமுறையிலிருந்து ராகுல் கற்க வேண்டும்

2017ம் ஆண்டுக்குப்பின் அஸ்வின் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற்று கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும் எக்கானமி குறைவாக இருந்திருக்கலாம். 10 ஓவர்கள் வீசியும் 2 பவுண்டரிதான் அஸ்வின் விட்டுக்கொடுத்தாலும், விக்கெட்டுகளுக்கு இடையே புமா-டூசென் அதிவேகமாக ரன்களைச் சேர்த்தது இந்திய அணியின் பீல்டிங் மந்தத்தையும், சரியான முறையில் பீல்டிங் அமைக்கவில்லை என்பதையும் காட்டுகிறது.

யஜுவேந்திர சஹல் மீண்டும் அணியில் இடம் பெற்றபோதிலும் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் வாரி வழங்கி, விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் சிரமப்பட்டார். சஹலுக்குப் பதிலாக ஜெயந்த் யாதவை அழைக்கலாம்.

ஷர்துல் தாக்கூர், புவனேேஷ்வர் குமார் தொடக்கத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும் கடைசி 10 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிவிட்டனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 86 ரன்களை வழங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் 68 ரன்களுக்கு 3 வி்க்கெட்டுகளை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரி்க்க அணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கத் தவறியதால், மிகப்பெரியவிலை கொடுக்க நேர்ந்தது. பும்ரா மட்டுமே வழக்கம்போல் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4ரன்கள் வீதம் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றவகையில் இந்திய அணியின் பந்துவீச்சு பெரிதாக சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.

ஒருநாள் போட்டிகளில் நடுப்பகுதி ஓவர்கள் என்பது முக்கியமானது. அந்தப் பகுதியை திறமையான பந்துவீச்சாளர்கள், கட்டுக்கோப்பாக பந்துவீசக்கூடிய வீரர்களைப் பயன்படுத்தினால், எதிரணி பெரிய ஸ்கோர் செய்வதைத் தடுக்க முடியும். நடுப்பகுதியில் விக்ெகட்டுகளையும் வீழ்த்துவது, கடைசி 10 ஓவர்களில் எதிரணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தி ஆல்அவுட் ஆகும் நிலைக்கு தள்ளிவிடும். ஆனால், இந்தப் போட்டியைப் பொறுத்தவரை நடுப்பகுதியை பயன்படுத்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் தவறிவிட்டனர்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோலி(51) ஷிகர் தவண்(79)இருவரும் 2-வது வி்க்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்ததுதான் ஆறுதலானது. ரிஷப் பந்த்(16), ஸ்ரேயாஸ் அய்யர்(17), அறிமுகமாக வீரராகக் களமிறங்கிய வெங்கேடஷ் அய்யர்(2) என நடுவரிசை பேட்ஸ்மேன்கள் மீது நம்பிக்கை இருந்தும் சொதப்பிவிட்டனர்.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 138 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்தது. ஆனால், அடுத்த 76 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தததை என்னவென்று சொல்ல முடியும்.

ரிஷப் பந்த் தவறான ஷாட்டை அடிக்க இறங்கியபோது, டீக்காக்கால் அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் ஷாட் பந்தில் திணறுவார் எனத் தெரிந்து இங்கிடிய வீசிய பந்தில் தேவையில்லாத ஷாட்டை அடிக்கமுற்பட்டு ஆட்டமிழந்தார், வெங்கடேஷ் ஹூக் ஷாட் அடிக்க முற்பட்டு ஸ்கொயர் லெக் திசையில் சொல்லிவைத்து வீழ்த்தினர்.

ஷர்துல் தாக்கூர் டெய்லண்டராக களமிறங்கி 43 பந்துகளில் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தது ஆறுதலானது. அஸ்வின் இறங்க வேண்டிய இடத்தில் தாக்கூரை இனிவரும் போட்டிகளில் முன்வரிசையில் களமிறக்கலாம்.

ஒட்டுமொத்தத்தில் பந்துவீ்சில் நடுப்பகுதியில் கோட்டைவிட்டது, பேட்டிங்கில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால், எளிதாகப் பெற வேண்டிய வெற்றி கைநழுவியது.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை தொடக்க வரிசை மலான்(6), மார்க்ரம்(4), டீ காக்(27) என விரைவாக ஆட்டமிழந்தாலும், கேப்டன் புமா, டூசென் பார்ட்னர்ஷிப் அற்புதமாக அணியை மீட்டெடு்த்தனர். 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்க இழந்திருந்ததால் 200 ரன்களை தாண்டுவது கடினம் என எண்ணப்பட்டது.

ஆனால், டூசென், புமா இருவரின் நிதான பேட்டிங் விக்கெட்டுகளுக்கு இடையேஓடி ஏராளமான ரன்களைச் சேர்த்த விதம் இருப்பை வலுபப்டுத்தியது. இந்திய பீல்டிங் முறையும் வலுவாக இல்லை, சரியாக அமைக்கவும் இல்லாததை இருவரும் நன்கு பயன்படுத்தி விக்கெட்டுகளை இடையே ரன் சேர்த்தனர். டூசன் 83 பந்துகளிலும், புமா 133 பந்துகளிலும் சதத்தை நிறைவு செய்தனர்.

இருவருமே கடைசி 10 ஓவர்களை நன்கு பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தனர். கடைசி 10 ஓவர்களில் இந்திய அணியினர் கட்டுக்கோப்பாக வீசியிருந்தால் 250 ரன்களுக்குள் சுருட்டியிருக்கலாம். இந்தியத் தரப்பில் பும்ரா 2 விக்ெகட்டுகளையும், அஸ்வின் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here