முன்னால் நுவரெலியா மாநகர சபை சிரேஸ்ட உறுப்பினர் D.மாதவன் கொரோனாவால் காலமானார்…….

0
148

நுவரெலியாவில் சிரேஸ்ட தொழிற்சங்க அரசியல் வாதியாக செயல்பட்டு வந்த தனுஸ்கோடி மாதவன் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் காலமானார்.இறக்கும் போது இவருக்கு வயது (71).

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதுடன் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதணையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் நுவரெலியா பொது வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவு விசேட வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று (30) அதிகாலை உயிரிழந்ததாக நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவின் பிராந்திய தொற்றியியல் பணிப்பாளர் மதுர செனிவிரத்ன தெரிவித்தார்.

நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அமரர் டி.மாதவன், ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாநில பிரதநிதியாக 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான்(ஐயா)வின் நன்மதிப்பு பெற்று செயற்பட்ட மூத்த தொழிற்சங்கவாதியாவார்.

நுவரெலியா, பதுளை மற்றும் அட்டன் பொன்ற இடங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாநில பிரதிநிதியாகவும் தொழிலுறவு அதிகாரியாகவும் சேவையாற்றியுள்ளார்.

1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக உலக தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கைக்கான பிரதநிதியாக நியமிக்கப்பட்டவர். இவர் ஸ்ரேல், ஜப்பான்,இந்தியா மலேசியா,சிங்கபூர் உட்பட பல உலகநாடுகளுக்கு சென்று பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ள அவர் வெளிநாடுகளுடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட தேயிலை தொழிலாளர்களின் பிரச்சிணைகளை சர்வதேச ரீதியில் அனுகிவந்தவராவார்.

இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு இ.தொ.கா வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். அதன் பின் ஐக்கிய தேசிய கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மூன்றாவது தடவையாக சுயேட்சையாகவும் போட்டியிட்டு மூன்றாவது தடவையும் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நுவரெலியா மாநகர சபையில் மூன்று முறை சிரேஸ்ட உறுப்பினராக இருந்து நுவரெலியா மக்களுக்கு சேவை செய்துள்ளார்.

கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் இ.தொ.கா பொதுச்செயலாளர் எம்.எஸ். செல்லசாமி தலைமையிலான இலங்கை விவசாயிகள் சங்கத்தின் சிரேஸ்ட பொது செயலாளராக செயற்பட்டு நுவரெலியா மாவட்ட விசாயிகள் எதிர் நோக்கிவந்த பிரச்சிணைகளுக்கு பல தீர்வுகளை கண்டதுடன் முதல் முறையாக விதை உருளைக்கிழங்கு நுவரெலியாவில் பயிர் செய்கை செயற்பாடுகளுக்கு சக்தியாக இவர் செயல்பட்டவர்.

அவர் காலப்போக்கில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றிருந்த இவர் இலங்கை விவசாயிகள் சங்கத்தினை வழிநடத்தினார்.

இவர் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுப்பையா சதாசிவம், முன்னாள் பிரதியமைச்சரான வடிவேல் புத்திரசிகாமணி ஆகியோரின் இணைப்பிரியாத நண்பராவார்.

இவரின் பூதவுடல் நுவரெலியா மாநகர சபை பொது தகன சாலையில் கொரோனா சட்டவிதிகளுக்கமைய இன்று பிற்பகல் தகனம் செய்யப்படவுள்ளது.

நன்றி எஸ்.தியாகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here