இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சரும், இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முதிர்ச்சியான அரசியல் தலைவருமான அமரர் மங்கள சமரவீர அவர்களின் இறப்பிற்கு நாட்டின் பிரஜைகளாகவும், சமத்துவமான மக்கள் பிரதிநிதிகளாகவும் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக்கினால், பிரேரணை முன்வைக்கப்பட்டு சபையின் தவிசாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சபையில் 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து சபை உறுப்பினர் ராஜ் அசோக்கினால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது உரையாற்றிய ராஜ் அசோக்;
மங்கள சமரவீர என்ற பெயர் ஒரு தனி மனிதனின் பெயரல்ல அது ஒரு சுயாதீனமான அரசியல் சகாப்தம். இலங்கை அரசியல் வரலாறு பற்றி பேசும் போது நாங்கள் மங்கள சமரவீர அவர்களை மறந்துவிட்டோ அல்லது மறைத்துவிட்டோ பேசிவிட முடியாது காரணம் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மக்கள் சேவைகளுக்காக மட்டுமே அர்ப்பணித்த பெருந்தலைவர்களில் இவரும் ஒருவர்.
நாட்டில் எல்லா மக்களும் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் இனம்,மதம்,மொழி இவை அனைத்தும் எம்மை நெறிப்படுத்தவே தவிர வேறுபாடுகளை வளர்ப்பதற்கு அல்ல என்ற மேலான சிந்தனை கொண்ட நல்ல மனிதர் அமரர்.மங்கள சமரவீர அவர்கள்.
இப்படிப்பட்ட ஒரு உன்னதமான தலைவரை இழந்திருப்பது உண்மையிலேயே இலங்கை அரசியலும், இலங்கை மக்களும் சந்தித்த ஈடு செய்ய முடியாத இழப்புதான் ஆகவே ஒரு ஆளுமை மிக்க அரசியல் தலைவரின் இழப்பிற்கு ஒரு நல்ல அரசியல்வாதியாகவும் நடுநிலையான மக்கள் பிரதிநிதியாக என்னுடைய ஆழ்ந்த இரங்கள்களை இந்த சபையில் தெரிவிப்பதோடு மஸ்கெலியா பிரதேச சபை சார்பாகவும் மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்கிறேன் எனவும் கூறினார்.
மேலும் என்னுடைய இந்த விசேட பிரேரணையை சபையில் ஏற்றுக்கொண்டு அதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கிய சபையின் தவிசாளர் உட்பட அனைத்து உறுப்பினர்களுக்கும் இதயத்தால் நன்றி பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
செய்தி : ரொமேஸ் தர்மசீலன் – மஸ்கெலியா.