யாழில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

0
91

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்விநிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை மறுத்து கருத்து தெரிவிக்கும் போதே மாவட்ட செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “தனியார் கல்வி நிறுவனங்களை ஞாயிற்றுக்கிழமை இயக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டு மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை. எந்த அமைப்பும் என்னுடன் இது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை. தனியார் கல்விநிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை“ – என்றார்.

2023 ஜுன் 09ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பிரத்தியேக கல்வி வகுப்புக்களிலும் வாரத்தில் ஏழு நாட்களும் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் பிள்ளைகளிற்கும் சமூகத்திற்கும் ஏற்படும் சாதக, பாதக நிலைமைகள் பற்றிய கலந்துரையாடலின் விளைவாக “ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை நேரங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்களும் பிரத்தியேக வகுப்புக்களும் தரம் 9 வரையான மாணவர்களிற்கு வகுப்புக்களை நடாத்துவதனை தவிர்த்தல்” எனும் தீர்மானம் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here