யாழ்ப்பாணம், கொடிகாமம், வரணி பிரதேசத்தில் உரப்பையில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளத.
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணி, குடமியன் ஆதிசிவன் கோவிலை அண்மித்த பகுதியில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த காணியில் உள்ள பற்றைப் பகுதியில் வெடிபொருட்கள் சில காணப்படுவதாக நேற்றிரவு கொடிகாமம் பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர். இடத்திற்கு விரைந்த பொலிசார் இவற்றை மீட்டுள்ளனர்.
வெடிபொருட்கள் மீட்கப்பட்டதை அடுத்து நேற்று முதல் குறித்த பிரதேசத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை, நாட்டில் தாக்குதல் ஒன்று நடத்தப்படக்கூடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கடந்த 11ஆம் திகதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது தெரிவித்தார்.
இந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையமும், மத்தல விமான நிலையமும் தாக்கப்படும் என பங்களாதேசில் இருந்து மின்னஞ்சல் அச்சுறுத்தல் ஒன்று வந்துள்ளதாக செய்திகள் வழங்கிய நிலையில், விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தச் செய்தியை பொலிஸ் பேச்சாளர் ஏற்கவோ, மறுக்கவோ இல்லை.
இதேவேளை, தற்போது கொடிகாமம் பிரதேசத்தில் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. மீண்டும் மக்களை பதற்றமடையக்கூடிய வகையில் செய்திகளும், தகவல்களும் வெளிவந்தவண்ணமுள்ளன.
இவை திட்டமிட்டு பரப்பப்டுகின்றனவா அல்லது உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறாதா என்பதை பாதுகாப்புத் தரப்பினர்கூட இன்னமும் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவில்லை.
கடந்த பல நாட்களாக காணாமல் போயிருந்த ஞானசார தேரர் கடந்தவாரம் முதல் திடீரென வெளியே வந்து தாக்குதல், தீவிரவாதம் குறித்த சர்ச்சைக்கு தகவல்களை வழங்க ஆரம்பித்துள்ளமையும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.