யாழ் மாவட்ட செயலகத்திற்கு பாராட்டு!

0
95

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மிகவும் சிறப்பா உள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பாராட்டியுள்ளார்.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார மற்றும் மேலதிகச் செயலாளர்  நிஷாந்த ஆகியோர் , நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் கே சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன், மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் , எஸ். ஆலோக பண்டார, யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தமது முதலாவது விஜயம் எனவும், இலங்கையில் அதிக கவனம் ஈர்க்கப்படும் மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டம் உள்ளதாகவும், அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் மிகவும் சிறப்பாகவிருப்பதாக பாராட்டியதுடன், கலந்துரையாடலின் நோக்கமானது மாவட்டத்தின் நிர்வாகத் தேவைப்பாடுகளை ஆராய்வதே எனவும் தெரிவித்து, ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான தேவைப்பாடுகளை பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்து கவனத்தில் எடுத்தார்.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பிரதேச செயலகங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்கள், நெடுந்தீவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துச் சவால்கள், நடைமுறைப்படுத்திவரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் உள்ளிட்ட விபரங்களை செயலாளருக்கு விபரமாக எடுத்துரைத்தார்.

மேலும், கலந்துரையாடலுக்கு பின்னராக அமைச்சின் செயலாளர் மற்றும் மேலதிகச் செயலாளர் ஆகியோர் மாவட்ட செயலர் சகிதம் மாவட்டச் செயலகத்தின் நிர்வாகப் பிரிவு, தாபனப் பிரிவு , திட்டமிடல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்குச் சென்று கோவைகளை பேணும் முறைமைகளையும் அதன் பாராமரிப்புக்களையும் அவதானித்து சிறப்பான முறையில் கோவைகள் பேணப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், அலுவலகங்களின் உள் ஒழுங்கமைப்புக்களையும், மாவட்டச் செயலகத்தின் உற்புற வெளிப்புற பராமரிப்புக்களையும் பார்வையிட்டு முறையான பராமரிப்புக்களையும், நிர்வாகச் செயற்பாட்டையும் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here