2007-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது . இதில் இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கியதை மறக்க முடியாது. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் 6 பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு தெறிக்கவிட்டு சிலிர்க்க வைத்தார். அவரது இந்த உலக சாதனை நிகழ்த்துவதற்கு உத்வேகமாக ஒரு கார் இருந்திருப்பது 18 ஆண்டுக்கு பிறகு தற்போது தெரிய வந்துள்ளது.
ஐ.பி.எல். நிதிமுறைகேட்டில் சிக்கி வெளிநாட்டில் வசித்து வரும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி இது குறித்து கூறுகையில்,
‘2007-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக வீரர்களின் ஓய்வறைக்கு சென்ற நான், உங்களில் யாராவது ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தாலோ அல்லது ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்தாலே பார்ஷ் கொகுசு கார் பரிசாக வழங்கப்படும் என அனைவரிடமும் சொன்னேன். அந்த சவாலில் யுவராஜ்சிங் வெற்றி பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ்சிங் 6 சிக்சர் விளாசியதும் பேட்டை உயர்த்தியபடி எல்லைக்கோடு அருகே நின்றிருந்த என்னை நோக்கி ஓடி வந்து, பார்ஷ் கார் எங்கே என்று கேட்டார். அவரிடம் அந்த சாதனை பேட்டை வாங்கிக் கொண்டு சொகுசு காரை பரிசாக அளித்தேன்’ என்றார்.