கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன். ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்தப் படத்தில் இணைவது எனக்கு உண்மையிலேயே ஒரு கனவு, நனவாகும் வாய்ப்பாக இருந்தது.
வாழ்க்கையில் சில சமயங்களில், நமது கனவுகளிலிருந்து விலகிச் சென்றாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற வேண்டிய தருணங்கள் வரும். இந்த இரண்டு ஜாம்பவான்களுடனான எனது தொடர்பு நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியது. இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகினாலும், தொடர்ந்து அவர்களின் நிபுணத்துவ ஆலோசனையை நான் நாடுவேன். இந்த மாபெரும் படைப்புக்காக என்னை கருத்தில் கொண்டதற்கு, இருவருக்கும் என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சுந்தர்.சி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
hindutamil




