லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட 67 பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் 1100 ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோர்களுக்கு நாளை முதல் சைனோபார்ம் முதலாது தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஆறுமுகன் ஜெயராஜன் தெரிவித்தார்.
குறித்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் லிந்துலை பொது சுகாதார பிரிவில் நான்கு பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளான ஹோல்புறுக்கு தமிழ் வித்தியாலயத்திலும், லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும், அக்கரபத்தனை, மெராயா ஆகிய இடங்களிலும் இந்த தடுப்பூசி வழங்கும் வேளைத்திட்டம் நாளை 14 ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 16 திகதி வரை முன்னெடுக்கவுள்ளன.
இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவதற்கு குறித்த பாடசாலைகளில் பணி புரியும் அதிபர் ஆசிரியர்கள், பாடசாலையில் பணிபுரியம் ஊழியர்கள் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதே நேரம் தலவாக்கலை தேயிலை ஆராச்சி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சி.டி. தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியர்வர்களுக்கும் சைனோபாரம் முதல் தடுப்பூசி 600 பேருக்கு வழங்க நடவடிக்கைகளை இதன் போது மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (13) ம் திகதியும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கொரோனா சைனோபார்ம் முதல் டோஸ் லிந்துலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பொது வைத்திய அதிகாரி காரியாலயத்தில் 439 பேருக்கும், ரதத்னகிரி கிராம சேவகர் பிரிவில் ரத்னகிரி சிங்கள வித்தியாலயத்தில் 455 பேருக்கும், அக்கரபத்தனை கிராம சேவகர் பிரிவில் போபத்தலாவ விகாரை மற்றும் அக்கரபத்தனை சிங்கள வித்தியாலயம் ஆகியவற்றில் 693 பேருக்கும், கிலாசோ கிராம சேவகர் பிரிவில் கிலாசோ கிளினிகில் 272 பேருக்கு மொத்தம் 1859 பேருக்கு சைனோபார்ம் முதல் டோஸ் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து லிந்துலை பொது சுகாதார பிரிவின் வைத்தியர் ஜே.அபேகுணரத்ன சிங்கள மொழியில் கருத்து தெரிவிக்கையில்.
இன்று தோட்டப்பகுதியில் பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுவதனால் தோட்டத்தில் வாழும் பலர் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. ஆகவே தான் கடந்த காலங்களில் தோட்டப்பகுதியில் தடுப்பூசிகள் போடப்பட்ட போதிலும் அவை ஐம்பது அறுபது சதவீதமாக காணப்பட்டன. ஆனால் இன்று அந்த நிலை மாறி 80 சதவீதம் தொடக்கம் 90 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
லிந்துலை சுகாதார பகுதியில் கடந்த காலங்களில் கொவிட் 19, 10 மரணங்கள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் வயோதிபர்களே நேற்று கூட எமது அதிகார பிரிவில் ஒரு மரணம் இடம் பெற்றுள்ளது ஆகவே அனைவரும் இந்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் அப்போது இந்த கொடிய மரண பிடியிலிருந்து விடுபடலாம் கொழும்பு உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் 1000 தடுப்பூசிகள் வந்தால் 2000 பேர் தடுப்பூகளை போட்டுக்கொள்ள முண்டியடிப்பதாகவும் ஆனால் இங்கு அந்த நிலை இல்லாதிருப்பது கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்