வங்குரோத்தடைந்த நாட்டை ஜனாதிபதி மீட்டெடுத்ததால் தான் ஜனாதிபதி தேர்தலில் பலரால் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது

0
80

பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்ததால் தான் ஜனாதிபதி தேர்தலில் பலரால் சுதந்திரமாக போட்டியிடக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

அரசியல் மேடைகளில் ஏறி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிக்கும் அரசியல்வாதிகள், அதற்கான சூழ்நிலையையும் ஜனாதிபதிதான் ஏற்படுத்திக்கொடுத்தார் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் அவர் கூறினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் கண்டி ‘கரலிய’ அரங்கத்தில் நேற்று (10) நடைபெற்ற தோட்ட தொழிற்சங்கங்களின் இளம் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“பொருளாதார நெருக்கடியால் நாட்டில் வரிசை யுகம் உருவாகி இருந்தது. இந்நிலைமை மேலும் சில மாதங்களுக்கு தொடர்ந்திருந்தால் இலங்கை நாடே நாசமாகி இருக்கும். சவால்களை ஏற்காது அரசியல் தலைவர்களெல்லாம் ஓடி ஒளிந்தார்கள், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்கவே சவாலை ஏற்று நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாத்தார்.

அவர் இவ்வாறு நாட்டை பாதுகாத்ததால்தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களால் போட்டியிட முடிகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு எப்படி இருந்தது இன்று எப்படி உள்ளது என்பதை மக்கள் மறந்துவிடவில்லை.

மேடை அரசியலைவிட யதார்த்த அரசியலே நாட்டுக்கு தேவை. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தால் நாடு நிச்சயம் மேம்படும், அதனை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுஉரிமை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் , கல்வி மேம்பாடு மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதிலும் குறியாக உள்ளார். இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எமது மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு சிறந்த ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். – “ – என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here