வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அநீதி – துரோகம் இழைக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் அமைந்துள்ளன என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டி, பன்வில பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,
போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில்வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு காத்திரமான பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். இவ்விருமாகாணங்களில்வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியென்ற அடிப்படையில் இதுவிடயத்தில் தமிழ்க் கூட்டமைப்புக்கே கூடுதல் பொறுப்பு இருக்கின்றது.
எனினும், கொள்கை அரசியல் என்ற கோட்பாட்டுக்குள் ஒளிந்துகொண்டு, கடந்த ஆட்சியின்போது அபிவிருத்திமீது கூட்டமைப்பு எம்.பிக்கள் கவனம் செலுத்தவில்லை. அரசியல் தீர்வு விடயத்தை அது பாதித்துவிடும் என நியாயமும் கற்பித்தனர். போர்க்குற்ற விசாரணை, காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினை உட்பட பல விடயங்களை மனதில்வைத்து மக்களும் அதற்கு ஆதரவளித்தனர்.
பொதுவேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது. எனவே, ஆட்சிமாற்றத்தின் பின்னராவது விடிவுகிட்டும் என தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், தமிழ் மக்களுக்கு எதாவது கிடைத்தால் அதை தடுப்பதும் -இழுத்தடிப்பு செய்வதுமே கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் கொள்கையாக மாறியிருப்பது பெரும் கவலையளிக்கின்றது.
அமரர். சிவசிதம்பரத்துக்கு ( 1968-03-08 , 1970-03-25) பிறகு தமிழர் ஒருவர் பிரதிசபாநாயகராகும் வாய்ப்பு அண்மையில் உதயமாகியது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பயன்படுத்தி அதற்கான வாய்ப்பையும் கூட்டமைப்பு இல்லாமல் செய்தது. 50 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சந்தர்ப்பத்தை அரசியல் நோக்கத்துக்காக கோட்டைவிட்டது வேதனைக்குரிய விடயமாகும்.
அங்கஜனை எதிர்ப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருப்பின், அரசுடன் பேரம்பேசி அப்பதவியை குழுக்களின் பிரதி தவிசாளராக இருக்கும் செல்வத்தாருக்காவது பெற்றுக்கொடுத்திருக்கலாம் அல்லவா? சபாநாயகர், பிரதிசபாநாயகர் பதவிகள் ஆளுங்கட்சியிடம்தான் இருக்கவேண்டும் என எங்கும் சட்டமில்லை.
அதுமட்டுமல்ல வடக்கு, கிழக்குக்கான வீடமைப்புதிட்டத்தை அமைச்சர் சுவாமிநாதன் ஆரம்பத்தில் முன்னெடுக்கவிருந்தாலும் – பலகாரணங்களைக்கூறி கூட்டமைப்பு அதை இழுத்தெடுத்தது. அம்மக்களுக்கான வீடமைப்புத்திட்டத்தை அமைச்சர் மனோ கணேசன் முன்னெடுக்க முற்படுகையில் அதற்கும் முட்டுக்கட்டை போடப்படுகின்றது. மனோவிடமிருந்து பிடுங்கி, திட்டத்தை சுவாமிநாதனிடம் ஒப்படைக்க வலியுறுத்தும் கூட்டமைப்பின் அறிவிப்பின் பின்னணி என்ன?
வடக்கு, கிழக்கில்வாழும் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்ககூடாதென கூட்டமைப்பு விரும்புகிறதா அல்லது நாமும் செய்யமாட்டோம் – வேறு எவரும் செய்யவும் கூடாதென நினைக்கின்றதா? எத்தனை வாய்ப்புகள் நழுவப்படுகின்றன என்பதை பட்டியலிட்டுக்காட்டுவதற்கு எமக்கு வெருநேரம் எடுக்காது. எனினும், ஒற்றுமை அரசியலை கருதி மௌனம் காத்துவருகின்றோம். எமது விட்டுக்கொடுப்பை பலவீனமாக கருதினால், இனியும் பொறுமைகாக்க மாட்டோம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
போர்காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக தலைநகரிலிருந்து களமாடிய எமது தலைவர் மனோ கணேசனுக்கு வடக்கு, கிழக்கு மக்களின் வலி நன்றாகவே புரியும் என்பதை அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.
சலுகை அரசியலை ஏற்று, உரிமை அரசியலை கைவிடுமாறு நாம் வலியுறுத்தவில்லை. மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டும். வாழ்வாதாரம் இல்லாவிட்டால், உரிமை பற்றி பேசுவதில் என்ன பயன்? இதை கண்டறிந்து சேவையாற்றியதால்தான் இராணுவ சிப்பாயொருவருக்கு மக்கள் மாலைபோட்டு வணங்கும் நிலையும் உருவானது. எனவே, இனியாவது மக்கள் நலன்சார் அரசியலை கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
மலையக கள்ளன்



