தமிழர்களை பலவீனப்படுத்தும் செயலில் ஏனைய சமூகத்தவர்கள் ஈடுப்படுகிறார்கள் என்று யாரவது சொன்னால் அது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல் ஆகிவிடும்.
தமிழ்த்தேசியம் என பேசும் அரசியல் தலைமைகள் தமிழர்களை பிளவுபடுத்தி
பார்ப்பது கண்டிக்கதக்க விடயம். குறிப்பாக வடக்கின் தலைமைகள் வாயலவில் மட்டுமே தமிழர்களின் ஒற்றுமையை குறித்து பேசுகிறது .செயலில் இல்லை.
ஏனெனில் அன்மையில் தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் சகல தமிழ்க்கட்சிகளும் பிரதேசவாதம் இன்றி ஒன்றிணைய அழைப்பு விடுத்தார்.
ஆனால் அதற்கு சாதகமான கருத்துக்களை வெளியிடாமல் மறைமுக தாக்குதல்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகின்றமை வேடிக்கையான விடயம்.
இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் பிரதிநிதிகள் நாங்களே என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களை பிரதேச ரீதியான கண்ணோட்டத்திலே பார்க்கிறது. அத்துடன் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவும் இல்லை. இதனை கிழக்கின் அரசியல் தலைவரான கருணா அவர்களும் கூறியுள்ளார்.
முன்னர் மலையக தமிழர்களின் பிரச்சனைகளை தொழிற்சங்க பிரச்சனையாக சர்வதேச சமூகத்திற்கு காட்டிய வடக்கின் தலைமைகள் இன்றும் அதே பூச்சாண்டி வித்தையை காட்ட பார்ப்பது மலையக தலைமைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அரசியல் இலாபத்திற்காக இதனை சாதகமாக பயன்படுத்தியது ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது .மலையக அரசியலில் சிந்திக்க தெரிந்த தூர நோக்கு தலைவர்கள் உருவாகியுள்ளனர்.இதனை அறிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படவேண்டும்.அவ்வாறு செயற்படாவிடின் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது கடினமாகி கொண்டே போகும்.
போராட்டங்களின் போது மாத்திரம் இந்தியாவின் உதவியையும், இலங்கையில் வாழும் மலையக தமிழர்களின் உதவியை நாடு வடக்கின் தலைமைகள் ஏன் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயல்பட முடியாது.
குறிப்பாக வன்னியில் கணிசமான அளவு மலையக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறக்க கூடாது.இதனால் அனைத்து தமிழர்களின் அபிலாஷைகளையும் ஒரே கண்ணோட்டதுடன் பார்க்க வேண்டும்.
யாழ் தலைமை மலையகத்தை மட்டுமல்ல, வன்னி, கிளி, முல்லை மன்னார், மட்டக்களப்பு. அம்பாறை. திருமலை, கொழும்பு எல்லாவற்றையும் நாட்டாண்மை செய்ய நினைக்கிறது.
இங்கு நான் தான் மன்னனாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து கனவு கண்டால் அரிசியல் தீர்வு முதற்கொண்டு ஒரு கத்தரிக்காயும் கிடைக்காது.
அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம் (Tamil Parliamentarian Cacus) என்ற யோசனையை முன்வைத்தார் .இது அமெரிக்க காங்கிரஸில் இருப்பது போன்ற Congressional Black Caucus (CBC) என்ற அமைப்பை போன்றது. இதை ஒரு ஆரம்பமாக ஏற்றுக்கொள்ள கூட்டமைப்பின் யாழ் தலைமைக்கு மனமில்லை. என்பது வேதனையான விடயம்
முன்னர் சிங்கள சமூகங்களுக்கிடையே உடரட்ட, பஹத்தரட்ட என பிளவுகள் இருந்தன.ஆனால் அவைகள் ஒன்றிணைந்து செயல்பட வில்லையா..? அதே போன்று தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என்பதே பலரது அபிப்பிராயம்
அமைச்சர் மனோ கணேசனின் வேண்டுகோளை ஏற்று வடக்கு கிழக்கு மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட்டால் அரசியல் ரீதியாக பலம் பெறலாம்..இல்லாவிடில் சும்மா பேசிகொண்டே.. இருக்க வேண்டியது தான்.
– தினேஷ்-