வட மாகாணத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் போலியான இறப்பர் முத்திரைகள் ஊடாக பணம் பெற்றுக் கொண்டு பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பு உடன் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவு
கல்வி அமைச்சின் அதிகாரிகளின் போலியான இறப்பர் முத்திரைகள் தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளது.இதற்காக பல கோடி ரூபாய்கள் பணமாக பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வட மாகாணத்தில் பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்பின் பொழுது முறைகேடுகள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.இது தொடர்பாக கல்வி அமைச்சு விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் நேற்று (13.06.2018) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் உட்பட கல்வி திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.பாடசாலையின் அதிபர் செல்வி கிரேஸ் தேவயாளினி தேவராஜா தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து இங்கு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வட மாகாணத்தின் பல பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சின் ஊடாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்பொழுது தங்களுடைய பாடசாலைகளுக்கு பெருமளவில் அவர்களுடைய நியமனக் கடிதங்களுடன் வருகை தருவதாகவும் அவர்களை தாங்கள் இணைத்துக் கொள்வதா?இல்லையா?என்பது தொடர்பில் பாடசாலை அதிபர்கள் சிலர் என்னிடம் வினவினார்கள்.
ஆனால் நான் கூறினேன் கல்வி அமைச்சு ஒரு சில நியமனங்களையே வழங்கியுள்ளது.அதிகமான நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவே அந்த நியமன கடிதங்களை எனது கவனத்திற்கு கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய அந்த கடிதங்களை நான் பார்வையிட்டேன்.உடனடியாக எங்களுடைய அமைச்சின் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர்கள் இவை போலியான நியமனங்கள் என்பதை உறுதிப்படுத்தினார்கள்.
நான் உடனடியாக இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.அவர் உடனடியாக எமது அமைச்சின் அதிகாரிகள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்து அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு என்னிடம் தெரிவித்துள்ளார்.நான் இது தொடர்பாக உடனடியாக எங்களுடைய அதிகாரிகளுக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
அறிக்கை கிடைக்கப்பெற்றதும் குற்றவாளிகளாக இனம் காணப்படுபவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் வட மாகாணத்தில் ஒரு சில தரகர்கள் இவ்வாறான போலியான நியமனங்களை வழங்கி பணம் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இது தொடர்பாகவும் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளேன்.எனவே தயவு செய்து வட மாகாணத்தில் இருக்கின்றவர்கள் இவ்வாறான போலியான முகவர்களிடம் ஏமாற வேண்டாம்.எனது பெயரை பயன்படுத்தி யாரேனும் பணம் பெற்றுக் கொள்ள முயற்சி செய்தால் தயவு செய்து என்னுடைய கவனத்திற்கு கொண்டுவருமாறும் இவ்வாறான போலி தரகர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் நான் அவர்களிடம் கேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
எஸ். சதீஸ்