நுவரெலியா மாவட்ட செயலக பகுதிக்குட்பட்ட அம்பேவெல, பட்டிப்பொல கந்தஎல, 30 ஏக்கர் மற்றும் 7ம் கட்டை போன்ற பகுதிகளில் உள்ள விவசாய காணிகளுக்கு காட்டு எருமைகள் வேலிகளை உடைத்துக்கொண்டு ஊடுருவதனால் ஏற்படும் சேதங்களை அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாட்டை கண்டித்தும் குறித்த பிரதேசங்களின் விவசாயிகள் 16.05.2018 அன்றைய தினம் அம்பேவெல பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாகாண முன்னால் விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ, நுவரெலியா பிரதேச சபை உப தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த பல வருட காலமாக காட்டு எருமைகளால் தமது பயிர் நிலங்கள் சேதமாக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பிரதேச செயலாளருக்கும் பலமுறை அறிவித்திருந்த போதிலும் தமக்கு உரிய பதில் கிடைக்காமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் தாம் ஈடுப்பட்டதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை இந்த காட்டு மாடுகளின் அச்சுறுத்தல் காரணமாக தமது பிள்ளைகள் பாடசாலை விட்டு வரும் பொழுதும் தாமும் மாலை வேளைகளில் குறித்த வீதிகளில் பெரும் அச்சத்துடன் பயணிக்க நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாற் பண்ணைகளுக்கு குறித்த மாடுகளை பிடித்து கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்களை கடந்த பல மாதங்களாகவே நுவரெலியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.
மேற்படி மாடுகளை பிடிப்பதற்கும், கொண்டு செல்வதற்குமான அனுமதி பத்திரத்தையுடைய பண்ணையாளர் ஒருவர் குறித்த மாடுகளை கடந்த 5 மாத காலங்களாக அவதானித்து 10 காட்டு மாடுகளை பிடித்து ஓர் இடத்தில் கட்டி வைத்திருந்திருந்துள்ளார்.
எனினும் குறித்த பிரதேசத்தின் ஊடாக பயணித்த வனவிலங்குகள் மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கட்டி வைத்திருந்த இந்த மாடுகளை அவதானித்துள்ளார்.
எடனடியாக தமது சகாக்களுடன் தாமும் இணைந்து குறித்த மாடுகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட வேளையில் பிரதேச விவசாயிகளுக்கும் பிரதி அமைச்சர் உட்பட அந்த குழுவினருக்கும் இடையில் கடந்த 14ம் திகதி வாக்குவாதம் இடம்பெற்று முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் அமைச்சு பதவியின் பலத்தை பயன்படுத்திக் கொண்ட பிரதி அமைச்சர் குறித்த மாடுகளை விடுவித்துள்ளார். அவ்வாறு விடுவிக்கப்பட்ட மாடுகளால் 7ம் கட்டை பிரதேசத்தில் இருக்க கூடிய சில பயிர் நிலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் சுட்டிக்காட்டினார்கள்.
தமது பயிர் நிலங்களை காட்டு மாடுகளிடமிருந்து பாதுகாத்து தருமாறு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்தின் குறித்த அமைச்சரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த அதேவேளை அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வழியுறுத்தினர்.
சுமார் 2 மணித்தியாலங்களாக விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு கலைந்து சென்றமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)