வரிப்போருக்கு மத்தியில் அமெரிக்கா, இந்தியா மீண்டும் பேச்சு!

0
4

இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது.

அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது ஆக்கப்பூர்வமாக இருந்ததாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார். பின்னர் 90 நாடுகளுக்கு அந்த நடவடிக்கையை ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உலக நாடுகள் முன்வந்தன. இதில் சில நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடனான பேச்சுவார்த்தை முடியவில்லை. ஆனாலும், 90 நாள் காலக்கெடு முடிந்ததும், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அமலுக்கு வந்தது.

இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட வேளாண் விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 25 சதவீத வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7-ம் திகதி அமுலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27-ம் திகதி அமுலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டதால் ஆகஸ்ட் 25-ம் திகதி நடைபெற இருந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை தடைபட்டது.
இந்நிலையில், சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ட்ரம்பின் வரி விதிப்பால், சீனாவுடன் இந்தியா நெருங்கி வருவதாக அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருந்தார்.

இந்நிலையிலேயே இரு தரப்பு பேச்சு இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here