குற்றவாளி நீதிமன்றத்தில் சத்தமிட்டு அழுது புலம்பியதால், நீதிமன்ற நடவடிக்கைகளை 20 நிமிடத்திற்கு ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.வவுனியா மரக்காரம்பளை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றுமொரு முச்சக்கர வண்டி சாரதிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து குற்றவாளி நீதிமன்றத்தில் சத்தமிட்டு அழுது புலம்பியதால், நீதிமன்ற நடவடிக்கைகளை 20 நிமிடத்திற்கு ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி தீர்ப்பை அறிவித்ததை அடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி அழுது புலம்பியதுடன் தன்னை விடுதலை செய்யுமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி விலா எலும்புகள் முறிந்த நிலையில் மூன்று வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் வீதியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைகளை நடத்திய வவுனியா பொலிஸார், முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரை கைது செய்தனர்.
கொல்லப்பட்டவரின் இரத்த மாதிரிகள் மற்றும் கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வண்டியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியதன் காரணமாக அவரே கொலை செய்ததாக உறுதியானது.
நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களின் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகவில்லை என்பதால், அவர் விடுதலை செய்யப்பட்டதுடன் மற்றைய சாரதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி ஆறுமுகம் தர்ஷனுடன் அரச சட்டத்தரணி தர்ஷிகா திருகுமாரநாதன் வழக்கை நெறிப்படுத்தினார்.