கரீபியன் கடலில் திடீரென போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட வெனிசுலாவை குறிவைத்து அமெரிக்கா தனது இராணுவப் படைகளை பெரிய அளவில் நகர்த்தி வருகிறது.
அதிநவீன போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் F 35 போர் விமானங்களை வெனின்சுலாவை நோக்கி அமெரிக்க ராணுவம் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இதனால் வெனிசுலா எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வெனிசுலாவிலிருந்து போதைப்பொருள் கும்பல்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாகவும், இந்த இராணுவ நடவடிக்கை அவற்றை அடக்குவதாகவும் டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு இந்த போதைப்பொருள் மாஃபியாவுடன் நேரடி தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்நது கூறி வருகிறார்.
அது மட்டுமல்லாமல், மதுரோவின் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 430 கோடி) வெகுமதியையும் டிரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், “மதுரோ அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன” என்று டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடகங்களில் நேரடியாக எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.