கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், போக்குவரத்து திணைக்கள அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1338 ஓட்டுநர் உரிமங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டினரின் வசதிக்காக ஒகஸ்ட் 03ஆம் திகதி இப் பிரத்யேக ஓட்டுநர் உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்பெல்லாம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு வெராஹெராவிலுள்ள போக்குவரத்து திணைக்களத்துக்கு செல்ல வேண்டியிருந்தது.
அதன்படி, ஒகஸ்ட் 3 ஆம் முதல் 17 வரை 1338 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒகஸ்ட் 7 ஆம் திகதியே அதிகப்பட்ச எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தேசிய சுற்றுலா சாரதிகள் சங்கம் இந்தத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காரணம் வெறும் 2000இற்கும் குறைவான விலையில் வெளிநாட்டினருக்கு உரிமங்களை வழங்குவது தொழில்முறை சுற்றுலா வாகனங்களை செலுத்தும் சாரதிகளின் வாழ்வாதாரத்துக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர்.
எனவே சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனங்களை செலுத்துபவர்களுக்கு இது பெரும் அநீதி என்று அச் சங்கப் பிரதிநிதி அமில கோரலகே தெரிவித்துள்ளார்.