வேலுக்குமாரின் குற்றச்சாட்டை நிராகரிக்கும் செந்தில் தொண்டமான். இ.தொ.கா எப்போதும் தொழிலாளர்களின் பக்கமே முடிவெடுக்கும்.

0
191

நாகஸ்தனை தோட்டத்தின் சூழ்நிலைகள் குறித்து எனக்கு J.E.D.B நிறுவனம் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களையே வெளியிட்டுள்ளேன். இதுதொடர்பிலான மேலதிக ஆவணங்கள் இருந்தால் வேலுகுமார் எனக்கு வழங்கும் பட்சத்தில் மேலதிக ஆய்வுகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு ஆதரவாக நாகஸ்தனை தோட்டத்தில் காணப்படும் உண்மையான நிலைமையை மறைக்க முற்படுவதாக வேலுகுமார் எம்.பி மீண்டும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு பதலளிக்கும் வகையில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

“நாகஸ்த்தனை தோட்டத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் மறைக்கப்பட்டுள்ளதாக என்மீது வேலுகுமார் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இருந்த சந்தர்ப்பத்தில் கூட மலையக மக்களுக்கு பாதிப்பாக அமையும் எந்தவொரு விடயத்துக்கும் ஆதரவு வழங்கியதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

2013ஆம் ஆண்டு ஊவா மாகணசபை வரவு செலவு திட்டத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மை இருந்தப் பொழுது மலையக மக்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதற்காக எனது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்திருந்தேன் என்பதை இவ்விடத்தில் நினைவுக்கூற விரும்புகிறேன்.

மலையக தமிழர்களுக்கு மாத்திரமல்ல எல்லை தாண்டி வடக்கு, கிழக்கு தமிழர்களின் உரிமைகளுக்காகவும் இ.தொ.கா தொடர்ந்தும் குரல் கொடுத்துள்ளது. அவ்வாறான சூழலில் தோட்டங்களை தனியாருக்கு கூறுபோட எவரும் முற்பட்டால் அதற்கு எதிராக முதலில் குரல் கொடுப்பது இ.தொ. காவாக தான் இருக்கும்.

நாகஸ்தனை தோட்டத்தின் நிலைமைகள் குறித்து J.E.D.B நிறுவனம் எனக்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களைதான் நான் வெளியிட்டுள்ளேன். இதுதொடர்பிலான மேலதிக ஆவணங்கள் இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எனக்கு வழங்கும் பட்சத்தில் மேலதிக ஆய்வுகளை என்னால் முன்னெடுக்க முடியும்.

மலையகத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

இ.தொ.கா ஆளுங்கட்சியில் இருந்தாலும் சரி எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி இறுதிவரை தோட்டத் தொழிலாளர்களுக்காகவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்துள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here