மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனம் ஊடாக உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்குரிய நடவடிக்கையை ஆரம்பிக்கவும்.
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பில் சிறிதரன் எம்.பியால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இவ்விவாதத்தில் மலையக மக்கள் தொடர்பில் மனோ கணேசன் கூறியவை வருமாறு,
” மலையக மக்களுக்காக நல்லாட்சியின்போது நாம் பல விடயங்களை முன்னெடுத்தோம். உரிமைசார் திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.4 வருடங்களே அரசாங்கத்தில் இருந்தோம். எனவே, அப்பயணத்தை தொடர்ந்து முன்னெடுங்கள்.
மலையக அதிகார சபை, பிரதேச செயலகம், காணி உரிமை, பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி , தனி வீடு, இந்தியாவுடன் பேச்சு நடத்தி அபிவிருத்தி திட்டங்கள் என முற்போக்கான பல விடயங்களை செய்தோம். எனவே, பிற்போக்காளர்களுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் தாமதிக்கப்பட்டே அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டனர். 2002 காலப்பகுதியிலேயே குடியுரிமை பிரச்சினைக்கூட முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டது.
ஹட்டன் பிரகடனத்தை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டது. அதில் கூறப்பட்ட விடயங்கள் இன்னும் அமுல்படுத்தப்படவில்லை.
காணி, கல்வி, சுகாதாரம், வருமானம், வறுமை ஒழிப்பு உட்பட பல விடயங்கள் கூறப்பட்டிருந்தன. ஒரு வருடம் நெருங்கும்வேளையில் இவை எதுவும் செய்யப்படவில்லை.
எனவே, 11 மாதங்கள் கடந்துவிட்டன. எனவே, இனியாவது நடவடிக்கையை ஆரம்பியுங்கள்.
வீட்டு உரிமை அவசியம். காணி உரிமை அவசியம். நல்லாட்சியின் நாம் ஆரம்பத்தை வழங்கினோம். அதனை முன்னெடுத்தால் நல்லது.
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா, கிளங்கன் வைத்தியசாலையை ஒன்றிணைந்து சிறந்த சுகாதார சேவையை வழங்குமாறு சுகாதார அமைச்சரிடம் கோருகின்றேன்.
மலையக அதிகார சபை இருக்கின்றது. கஷ்டப்பட்டே அதை கொண்டுவந்தோம். எனவே அதில் கைவைக்கவேண்டாம் என வலியுறுத்துகின்றோம்.” – என்றார் மனோ கணேசன்.