ஏமன் நாட்டின் தையிஸ் மாகாணத்திலுள்ள எரிபொருள் கிடங்குகளின் மீதான ஹவுதிகளின் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு மாகாணமான தையிஸில், கதாசி எரிபொருள் நிலையத்தில் அமைந்திருந்த எரிபொருள் கிடங்குகளின் மீது ஹவுதி கிளர்ச்சிப்படையினர், நேற்று (3) ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதல்களில், அந்த எரிபொருள்கள் வெடித்து ஒருவர் பலியானதுடன், 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், பலரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு ஏமனின் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையில் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளன.
இதுகுறித்து, ஏமனின் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதல் சம்பவத்தினால், அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் தீயால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உடனடியாக அந்நாட்டு தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஹவுதி படைகளின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.