அங்கு நான் இருக்கமாட்டேன் – இந்தியாவிடம் தோற்ற பின்னர் ஆஸி. அணித் தலைவி ஆதங்கம்!

0
3

அடுத்த உலகக்கிண்ண  தொடரில் நான் பங்கேற்க மாட்டேன் என அவுஸ்திரேலிய அணித்தலைவி  அலிசா ஹீலி தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண  தொடரில் நவி மும்பையில் நேற்று (அக். 30) நடைபெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசி இந்திய அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

தோல்விக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணித்தலைவி  அலிசா ஹீலி பேசுகையில், “இந்தத் தொடர் முழுவதுமே எல்லாருமே சிறப்பாக பங்களித்ததாக நினைக்கிறேன். அதனால்தான் தற்போது இங்கு நிற்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

நாங்கள் எங்களால் முடிந்தளவு செய்தோம். போட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்தினோம். வாய்ப்புகளையும் உருவாக்கினோம். ஆனால், அவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை” என்றார்.

அடுத்த உலகக்கிண்ண தொடரில்  விளையாடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த  அலிசா ஹீலி, “நான் அங்கு இருக்கமாட்டேன். அடுத்தச் சுற்றுக்கு அதுதான் அழகு. அடுத்தாண்டின் நடுப்பகுதியில் டி20 உலகக்கிண்ணம்  நடைபெறவிருக்கிறது. எங்கள் அணியினருக்கு மிகவும் உற்சாகமாகவுள்ளது.

ஆனால், ஒருநாள் கிரிக்கெட் அணியில் சில மாற்றங்கள் ஏற்படலாம்” என ஓய்வு முடிவு குறித்து சூசகமாகத் தெரிவித்தார்.

இதுவரை 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அலிசா ஹீலி, 3,563 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில், 7 சதங்களையும், 18 அரைசதங்களையும் விளாசியுள்ளார். நடப்பு உலகக்கிண்ண தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ஹீலி 299 ஓட்டங்களை  குவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here