லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் அணியை வீழ்த்திய கண்டி வோரியர்ஸ் இறுதி அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பினை தக்க வைத்தது.
முதல் சுற்றின் இறுதிப் போட்டி இன்றைய தினம் இரவு கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி வோரியார்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் போட்டியின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு நுழையும் இறுதி அணி எது என்பது தீர்மானமாகும்.
2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 18 ஆவது போட்டி நேற்றிரவு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ் மற்றும் கண்டி வோரியர்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
ஆரம்ப வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோரின் முதல் விக்கெட் இணைப்பாட்டம் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.
அதன்படி இரண்டாவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் சால்ட் 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜனித் லியனகே டக்கவுட்டுடனும், டிக்வெல்ல 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
முதல் மூன்று விக்கெட்டுகளும் 20 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டாலும் நான்காவது விக்கெட் இணைப்பாட்டம் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை சற்று உயர்த்தியது.
எனினும் அந்த இணைப்பாட்டமும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்க முடியாது உடைந்து போக, இறுதியில் தட்டுத்தடுமாறி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களை சேர்த்தது தம்புள்ளை ஜெய்ன்ட்ஸ்.
அணி சார்பில் அதிகபடியாக ரமேஸ் மெண்டீஸ் 41 ஓட்டங்களையும், ஜயதிலக்க 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் கண்டி அணி சார்பில் பினுர பெர்னாண்டோ, அல் – அமீன் தலா 3 விக்கெட்டுகளையும், ஷிராஸ் அகமட் மற்றும் நிமேஷ் விமுக்தி தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கண்டி வோரியர்ஸின் முதல் விக்கெட் முதல் ஓவரின் இறுதிப் பந்திலேயே வீழ்த்தப்பட்டது.
சரித அசலங்க இம்ரான் தாகீரின் பந்து வீச்சில் நான்கு ஓட்டங்களுடன் போல்ட் ஆகி வெளியேற இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த கென்னர் லூயிஸ் மற்றும் ரவி போபாராவின் இணைப்பாட்டம் அணிக்கு கைகொடுத்தது.
ஒரு கட்டத்தில் லூயிஸ் 27 (26) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்களுடன் களம் கண்ட ரவி போபாரா ஆடுகளத்தில் நிலைத்து நின்றார்.
இதனால் 19.2 ஆவது ஓவரில் கண்டி வோரிஸர்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை கடந்தது.
ரவி போபாரா 59 ஓட்டங்களுடனும் அஞ்சலோ பெரேரா 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ரவி போபாரா தெரிவானார்.