தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மற்றும் மலையக மக்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை என்பனவற்றை வலியுறுத்தி அட்டனில் இடம் பெறவுள்ள போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்தியான சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் நாளை 28ஆம் திகதி காலை 10 மணிக்கு அட்டனில் இடம் பெற உள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தற்போதைய அரசாங்கமும் இந்த அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுகின்ற தொழிற்சங்கங்களும் தோட்டக் கம்பனிகளும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றன.
மேலும் மலையகத் தமிழ் மக்களுக்கான காணி உரிமை, வீட்டு உரிமை தொடர்பில் தற்போதைய அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது உள்ளது.
இவற்றை கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்கப்பட வேண்டும். மலையக மக்களுக்கு காணியுரிமை வீட்டுரிமை வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்படுள்ள மாபெரும் எழுச்சிப் போராட்டம் அட்டனில் இடம்பெற உள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வாறானது ஒரு நிலையில் இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு மலையகத்தைச் சேர்ந்த சகல தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.