மஹிந்த ராஜபக்ஷ வீதியை அநாதையாக விட்டிருக்கும் ஹட்டன் நகர சபை ஹட்டன் நகரசபைக்குட்பட்ட ஹட்டன் பொது பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் ( மஞ்சு பார் ) காணப்படும் மஹிந்த ராஜபக்ஷ மாவத்தையானது நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது.
இப்பாதையானது சரியான மேற்பார்வையின்றி மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. பாதையின் குறிப்பிட்டதொரு பகுதியானது தனிப்பட்ட நபரொருவரின் மதில் காரணமாக ஏனைய பகுதிகளை விட சற்று ஒடுங்கியதாகவே காணப்படுகிறது. எதிர் புறத்தில் பாரிய பள்ளமொன்றும் காணப்படுகிறது. இந்நிலை காரணமாக இதற்கு முன் கிட்டத்தட்ட மூன்று முச்சக்கர வண்டிகள் அப்பாரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானமையும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவங்களின் பிறகு இரவு வேளைகளில் அல்லது அவசர நேரங்களில் எந்தவொரு முச்சக்கரவண்டிகளை அழைத்தாலும் வர மறுக்கின்றனர்.
மாணவர்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் போன்ற ஏனைய மக்களும் பயன்படுத்தக் கூடியதொரு பொதுவான பாதையாகவே காணப்படுகிறது. எனவே கட்டாயமாக புனரமைக்கப்பட வேண்டிய வீதியாகவே இவ்வீதி காணப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து கிராமவாசிகள் இணைந்தும், தனிப்பட்ட ரீதியாலும் பல முறை ஹட்டன் நகர சபைக்கு நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் அறிவித்திருந்த போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லையென்பது வேதனைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.