அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM” திறந்த வகுப்பறை கட்டிட தொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக நேற்று (08.01.2022) கையளிக்கப்பட்டது.
இந்த திறந்த வகுப்பறை கையளிக்கும் நிகழ்வு, பழைய மாணவர்களின் அனுசரணையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பழைய மாணவர் புலமைப்பரிசில் நிதியம் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாகக்குழுவிற்கு 2020/2021 ஆண்டு அதன் செயற்பாடுகளை மேற்கொள்ள பல்வேறு வழிகளில் உதவிய நலன்விரும்பிகளை பாராட்டும் நிகழ்வு கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான திரு. ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக வலயக்கல்வி பணிமனையின் கல்வி பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவியுமான திருமதி. லட்சுமி பிரபா செல்வேந்திரன் கலந்து சிறப்பித்தார்.
கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொது செயலாளர் திரு. அர்ஜுன் ஜெயராஜ் கருத்து தெரிவிக்கையில்,
கல்லூரியின் வளர்ச்சியில் பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்பு கடந்த இரு வருடங்களில் மாத்திரம் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் எனவும் கொரோனா காலப்பகுதியில் திட்டமிட்டபடி அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது போனாலும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கிய அணைத்து பழைய மாணவர்களுக்கும் நல்லுள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்தார் .மேலும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஹைலண்ட்ஸ் கல்லூரியின் மாணவன் செல்வன் லவனிஷ் மற்றும் அவரின் பெற்றோரை பழைய மாணவர் சங்கம் சார்பாக பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
க.கிஷாந்தன்