ஹட்டன் ரயில் நிலையத்தின் ஜெனரேட்டருக்கு போதியளவு எரிபொருள் இல்லாததால் ரயில் நிலையம் இரவில் இருளில் மூழ்கியுள்ளதாக அந்நிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசமான வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக சமீபத்திய நாட்களில் ரயில் நிலையத்திற்கு மின்சாரம் இடைவிடாது தடைப்பட்டுள்ளதாக நிலையத்தின் பொறுப்பாளர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்தார். நிலையத்தில் ஒரு பெரிய ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தாலும், போதுமான எரிபொருள் இல்லாததால் அதை இயக்க முடியவில்லை.
இரவில் ரயிலில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து ஏராளமான முறைப்பாடுகள் வருவதாக பெர்னாண்டோ கூறினார், ஏனெனில் நிலையம் மின்தடையின் போது முற்றிலும் வெளிச்சம் இல்லாமல் உள்ளது.
எரிபொருள் தொட்டியில் 20% க்கும் அதிகமான எரிபொருள் இருந்தால் மாத்திரமே ஜெனரேட்டரை இயக்க வேண்டும் என்று ரயில்வே பொறியியல் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, ஜெனரேட்டரில் 17% எரிபொருள் மட்டுமே உள்ளது, இதனால் இதனை பயன்படுத்த முடியாதுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரேட்டருக்கு 50 லிட்டர் டீசல் கோரி ஏப்ரல் மாதம் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது, ஆனால் இன்றுவரை ரயில் வே திணைக்களத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார். சுமார் ஐந்து மாதங்களுக்கு ஜெனரேட்டருக்கு மின்சாரம் வழங்க 50 லிட்டர் போதுமானதாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.