அனைத்து கட்சிகளையும் ஒரே மேடையில் ஏற்றுவதே எமது நோக்கம் – UNP விசேட அறிக்கை!

0
88

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின்  நோக்கமாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி இன்று (15) வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில், “இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். பல கட்சி முறைமையைப் பாதுகாக்கும் போது அரசியல் கட்சிகளின் தனித்துவம் மற்றும் கொள்கைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது முக்கியமாகும். இந்த நிலைப்பாட்டுக்கு வருமாறு அனைத்துக் கட்சிகளையும் நாம் கோருகிறோம்.

அதேபோன்று, மேற்குறிப்பிட்ட இலக்கை அடைவதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்து, ஒற்றுமையுடன் செயற்படுவதற்காகவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் நாம் கலந்துகொள்வோம். ஏனைய அரசியல் கட்சிகளுடனும் ஐக்கிய தேசிய கட்சி பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியுள்ளது.

மேலும், எமது இரண்டு கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை நியமிக்கும் யோசனைக்கும் நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம்.

ஐக்கிய மக்கள் சக்தி அண்மையில் வெளியிட்ட அறிக்கைகளையும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடிப்படைக் குறிக்கோளையும் கவனத்தில் கொண்டு எதிர்கால வேலைத்திட்டங்களை வகுக்கலாம்.” என மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here