அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

0
181

நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு இன்று எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியுடன் உருவாகியுள்ள அரசியல் மற்றும் சமூக அமைதியின்மையை படிப்படியாக வழமைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் தற்போது பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் விடுத்த அழைப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முறையான பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன, அதேவேளையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், எமக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், நிபுணர் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

“நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு ஒரு பொதுவான வேலைத்திட்டத்தின் மூலம் தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தில் தமது பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் என்பதே இந்த தருணத்தில் மக்களின் நோக்கமாகும். இது நம் அனைவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

மிக விரைவில் அரசியலமைப்பின் 19வது திருத்தம் , தேசியப் பொறுப்பை நிறைவேற்ற பாராளுமன்ற மேற்பார்வைக் குழு அமைப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு ஒரு பரந்த உரையாடலைத் தொடங்க நான் முன்மொழிகிறேன் என்று ஜனாதிபதி இந்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here