மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த ஒரு புரட்சியாளர் அமரர் அருள்சாமி அவர்கள். தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் ஆவார். இன்று (06/01/2024) அவரது ஐந்தாவது ஆண்டு சிரார்த்த தினமாகும்.
அமரர் அருள்சாமி அவர்கள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் மலையக மக்களின் மாற்றத்திற்காக கல்வி ஒன்றினாலேயே புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற ஆணித்தனமான நம்பிக்கையில் கல்வித் துறைக்கும் தொழிற்சங்க துறைக்கும் எண்ணிலடங்கா சேவைகள் ஆற்றியவர்.
மலையகத்தின் பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்த அருள்சாமி அவர்கள் பல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னின்று செயல்பட்டார்.
மும்மொழியிலும் சரளமாகப் பேசக் கூடிய புலமையைப் பெற்றிருந்தவர் அவர். தொழிற்சங்க போராட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றிய செயல் வீரர் எனலாம்.
மத்திய மாகாணத்தில் 1988ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அடுத்து வந்த மாகாணசபைத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக பணி புரிந்தவர். இக்காலத்தில் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தியில் அர்ப்பணிப்புடன் உழைத்தவர் அருள்சாமி.
காத்திருப்பு பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவராக அங்கம் வகித்தவர். இ.தொ.கா தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானால் 2018ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வின் போது தன்னை முழுமையாக அர்ப்பணித்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க பாடுபட்டவர்.
கலை, கலாசார ரீதியாகவும், சமூக மேம்பாட்டு விடயங்களிலும் அக்கறை கொண்டு செயற்பட்டு வந்திருக்கின்றார்.இ.தொ.கா வின் வளர்ச்சியில் அருள்சாமிக்கு பெரும் பங்கு உண்டு. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அஹிம்சை வழியில் அமைதியாக போராடினால் வெற்றி கொள்ள முடியும் என்பதை எடுத்துக் காட்டியவர் அமரர் அருள்சாமி.
தொழிற்சங்கத் துறையில் மனிதரில் மாணிக்கமாக அமரர் அருள்சாமி விளகுகின்றார். அவர் மறைந்து ஐந்து வருடங்கள் சென்றாலும், அன்னார் முழு மலையக மக்களின் உள்ளங்களில் என்றுமே வீற்றிருக்கின்றார்.
(க.கிஷாந்தன்)