அமரர் அருள்சாமியின் மூன்றாவது ஆண்டு சிரார்த்த தினம்.

0
338

மலையக மக்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த ஒரு புரட்சியாளர் அமரர் அருள்சாமி அவர்கள். தனது இறுதி நாட்கள் வரை மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர் ஆவார். இன்று (06/01/2022) அவரது மூன்றாவது ஆண்டு சிரார்த்த தினமாகும்.

அமரர் அருள்சாமி அவர்கள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராகவும் மலையக மக்களின் மாற்றத்திற்காக கல்வி ஒன்றினாலேயே புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற ஆணித்தனமான நம்பிக்கையில் கல்வித் துறைக்கும் தொழிற்சங்க துறைக்கும் எண்ணிலடங்கா சேவைகள் ஆற்றியவர்.

மலையகத்தின் பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் அரசியல் பாசறையில் வளர்ந்த அருள்சாமி அவர்கள் பல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னின்று செயல்பட்டார்.

மலையகத்தின் கல்வித்துறையில் இன்று பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வாய்ப்பை அவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஆண்டு ஒன்றுக்கு 500 மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு தொணிப்பொருளோடு 3179 ஆசிரியர் நியமனங்கள் 200க்கும் அதிகமான பாடசாலைகள் கணினி ஆய்வுக்கூடங்கள் இந்திய வளவாளர்கள் மூலமாக பயிற்சி பட்டறைகள் எமது மலையக ஆசிரியர்களுக்கான இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் என மலையக கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் அருள்சாமி அவர்கள்.

எமது மக்களின் அடையாளத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக இலக்கியத்துறை கலைத்துறை வரலாறு எனப் பல துறைகளில் சாதித்த மலையக சாதனையாளர்களுக்கு சாகித்திய விருதுகளை வழங்கி இலங்கையில் மட்டுமல்லாது அவர்களுக்கு சர்வதேச துறையில் அங்கீகாரங்களை வழங்கினார்.

தொழிலாளர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் பல தொழிற்சங்க நடவடிக்கை முன்னின்று நடத்திய அருள்சாமி அவர்கள் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பலமாகவும் செயல்பட்டார்.

மலையக வளர்ச்சியில் அவரது பங்களிப்பு வரலாற்றில் பேசப்பட வேண்டியவை. அவரின் இழப்பு மலையக மக்களுக்கு மாத்திரமன்றி இலங்கை மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். அவரது மூன்றாவது சிரார்த்த தினமான இன்று அவருடைய ஆத்ம சாந்திக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here