அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்புகள்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனி திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.
ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டுவரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு.
சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ தயாரிப்புகள் மீது 25% வரி விதிக்கப்படும். சீன பொருட்களுக்கான வரி குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.
மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ப்படும். அமெரிக்க மக்களின் நலன் கருதி நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அரசு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் பேச்சு சுதந்திரம் கொண்டு வரப்படும். அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்கி கொள்ளலாம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய நவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எரிசக்தி செலவை குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும்.
உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை வழங்க முடியும். இது அமெரிக்காவிற்கும் பலன் தரும்.