அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சமீபத்தில் சில வெளிநாட்டு மாணவர்களின் விசா இரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தகுதி வாய்ந்ததாக மாற்றும் விதியை உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ளது. சர்வதேச மாணவர்களை நிலையான தங்கும் காலங்களுக்கு உட்படுத்தும் வகையில் இந்த விதி உள்ளது.
தற்போது சர்வதேச மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் தங்கள் முழுநேர மாணவர் அந்தஸ்தை கடைப்பிடித்தால் அவர்கள் படிப்பு முடியும் வரை அமெரிக்காவில் தங்கலாம். இதை முன்னரே தீர்மானிக்கப்பட்ட தங்கும் காலத்திற்கு மாற்ற ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் விசாவில் ஒரு நிலையான காலாவதி திகதியுடன் சர்வதேச மாணவர்கள் அடிக்கடி விசா நீடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதிருக்கும். இது கூடுதல் தேவையற்ற தாமதங்கள், நிதிச் சுமை மற்றும் மாணவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.