அமெரிக்காவின் தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்காக இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அதேநேரம் 30வீத தீர்வை வரியை குறைத்துக்கொள்ள முடியாமல் போனால் ஆடை தொழிற்சாலைகளுடன் தொடர்புடைய 3இலட்சம் பேர்வரை பாதிக்கப்படுவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள 30வீத தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைக்காக அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவுக்கு சென்றுள்ளது. அவர்கள் இந்த வரியை மேலும் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என நாங்கள் கனவு கண்டு வருகிறோம். ஆனால் ஏனைய நாடுகளான இந்தியா, வியட்நாம். ஜப்பான் போன்ற நாடுகள் உள்ளக வர்த்க ஒப்பங்களை மேற்கொண்டு, அமெரிக்காவுடன் வர்த்தக இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு விதித்திருந்த தீர்வை வரியை பாரியளவில் குறைத்துக்கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 1முதலாம் திகதியில் இருந்து அமெரிகாவினால் அறிவிக்கப்பட்ட தீர்வை வரி அமுலுக்கு வருவதாக அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதனால் இன்னும் இருக்கும் ஒரு சில தினங்களுக்குள் எமக்கு விதித்திருக்கும் தீர்வை வரியை குறைத்துக்கொள்ளாவிட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். ஆனால் இதற்கு தீர்வாக அமெரிக்காவுடன் சில ஒப்பந்தங்களுக்கு செல்லப்போவதாக ஒரு சில அமைச்சர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது, அமெரிக்காவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்போவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இவர்கள் இவ்வாறு தெரிவிப்பதன் மறைமுகமான அர்த்தம், இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் அமெரிக்க நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக ஏகபோக உரிமையை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்வதற்கா அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.
அமெரிக்காவின் தீர்வை வரியை குறைத்துக்கொள்ள அரசாங்கம் அமெரிக்காவுடன் இவ்வாறான இணக்கப்பாட்டுக்கு செல்லப்போகிறதா என எங்களுக்கு தெரியாது. இதுதொடர்பில் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்காவில் இருந்து எரிபொருள் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லாத விடயமாகும். ஜனாதிபதி மாலை தீவுக்கு சென்று சுற்றித்திரியாமல் அமெரிக்காவுக்கு சென்று, இது தொடர்பில் உத்தியோபூரவமாக கலந்துரையாடி இருந்தால், தீர்வை வரியை குறைத்துக்கொள்வது தொடர்பில் எங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள முடியும். தற்போது அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள பிரதிநிதிகள் குழுவின் இது தொடர்பான கலந்துரையாடல்களின் முன்னேற்றம் என்ன என எங்களுக்கு தெரியாமல் இருக்கிறது.
அதனால் அரரசாங்ம் எஞ்சியிருக்கும் சில தினங்களிலாவது 30 வீத தீர்வை வரியை மேலும் குறைத்துக்கொள்ள இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எமது ஆடை தொழிற்சாலைகள் பாரியளவில் பாதிக்கப்படும். அதனால் 3இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் தொழில் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றார்.