”அமெரிக்காவின் வரி விதிப்பால் இலங்கைக்கு பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும். எனவே, இதனை அவசர நிலைமையாகக் கருதி, தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வலியுறுத்தியுள்ளார்.
விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,
”புதிய பரஸ்பர வரிக்கொள்கை அமுலாவதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளார். எனினும், 3 மாதங்களுக்கு பிறகு வரி அமுலுக்கு வரும். இது தேர்தல் கால உறுதிமொழியென்பதால் திட்டத்தை ட்ரம்ப் மீளபெறமாட்டார்.
இலங்கைமீது விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி குறைக்கப்பட்டாலும்கூட, 25 அல்லது 30 சதவீத வரியை செலுத்த வேண்டி ஏற்பட்டால் அது எமக்கு பாரிய பிரச்சினையாக அமையும். எனவே, இப்பிரச்சினைக்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். இந்த மூன்று கால பகுதிக்குள் உலக நாடுகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும்.
வரி விதிப்பால் ஆடை உற்பத்தி துறையில் வேலையில்லாமல் போகலாம். அதுனுடன் தொடர்புபட்ட ஏனைய உப தொழில்களின் வருமானத்துக்கும் தாக்கம் வரும். அதுமட்டுமல்ல எமது நாட்டு பொருளாதாரத்துக்கும் தாக்கம் வரும்.
2028 இல் நாம் கடனை மீள செலுத்த வேண்டும். அதனை இலக்காகக்கொண்டு செயற்பட வேண்டும். தற்போது எம்முன் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே, அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டும். தேசிய ரீதியில் பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இதனை அவசர நிலைமையாகக்கருதி, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். இந்த புதிய நிலைமையை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.