அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் தங்க ஆபரணங்களைத் திருடிய நான்கு சந்தேக நபர்கள், அம்பாறை பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 25 இலட்சம் ரூபா மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 06 கிராம் ஹெரோயின், 300 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் போன்றன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கினியாகல, சம்மாந்துறை, மத்திய முகாம் மற்றும் அம்பாறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் அம்பாறை நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்தக் கடையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக அம்பாறை மாவட்டத்தில் தங்க ஆபரணத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்தக் கைது
நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
சந்தேக நபர்கள் பரிகஹகலே மற்றும் வாவின்ன பிரதேசங்களைச் சேர்ந்த 27 முதல் 31 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் போதைப்பொருள் பழக்கத்தால் இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.




