ஜூலை 17, 2022 அன்று போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடு தழுவிய அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் ஊடாக , அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதாக மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02 இன் கீழ் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் தன்னிச்சையானது மற்றும் செல்லாதது என்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் பெரும்பான்மையினர் தீர்ப்பளித்தனர்.
பெரும்பான்மை நீதிபதிகளான தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோடகொட ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
எனினும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் உறுப்பினரான நீதிபதி அர்ஜுன ஒபேசேகர தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின் அவசரகாலப் பிரகடனம் அடிப்படை மனித உரிமைகளை மீறவில்லை என்று கூறினார்.
மாற்றுக் கொள்கைகளுக்கான மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
மனுதாரர்களின் சட்டக் கட்டணங்களை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி பதவியை ஒப்படைத்திருந்தார். அதனை தொடர்ந்து ரணிலுக்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன்போது ரணில் விக்கிரமசிங்கவினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டங்கள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.